புதுடெல்லி, ஏப்.15-
இந்திய பெண்கள் ஹாக்கி அணி விரைவில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 26-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை பெர்த்தில் நடைபெறும் இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியுடனும், எஞ்சிய 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா மோதுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சலிமா டேட் தொடருகிறார். ஜோதி சிங், சுஜாதா குஜூர், அஜ்மினா குஜூர், பூஜா யாதவ், மகிமா டேட் ஆகிய 5 வீராங்கனைகள் முதல்முறையாக தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
இது குறித்து தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில், ‘இந்த தொடர் எங்களது திறமையை சோதித்து பார்க்கவும், கடும் சவால் அளிக்கக்கூடிய அணிக்கு எதிராக எங்களது வியூகங்களை வகுத்து பார்க்கவும் மிகப்பெரிய வாய்ப்பாகும். அனுபவமும், இளமையும் கொண்ட சரியான கலவையில் அணியை தேர்வு செய்துள்ளோம். தேசிய போட்டிகளிலும், சீனியர் பயிற்சி முகாமிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இளம் வீராங்கனைகள் வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்கள் சர்வதேச போட்டிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு எப்படி விளையாடப்போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளோம்’ என்றார்.
இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: சவிதா, பிச்சுதேவி கரிபாம், பின்களம்: ஜோதி சிங், இஷிகா சவுத்ரி, சுசிலா சானு, சுஜாதா குஜூர், சுமன் தேவி, ஜோதி, அஜ்மினா குஜூர், சாக்ஷி ராணா. நடுகளம்: சலிமா டேட் (கேப்டன்), வைஷ்ணவி, நேஹா, ஷர்மிளா தேவி, மனிஷா சவுகான், சுனேலிதா தோப்போ, மகிமா டேட், பூஜா யாதவ், லால்ரெம்சியாமி. முன்களம்: நவ்னீத் கவுர், தீபிகா, ருதாஜா ததாசோ பிசல், மும்தாஸ் கான், பல்ஜீத் கவுர், தீபிகா சோரங், பியூட்டி டங்டங்.