tamilnadu epaper

இந்தியர்களின் ஆயுளை குறைக்கும் காற்று மாசு

இந்தியர்களின் ஆயுளை குறைக்கும் காற்று மாசு


புதுடெல்லி, மார்ச் 12 – 

'உலக காற்றுத்தர அறிக்கை 2024' ஐ சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் ஐகியூஏர் வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே அதிக காற்று மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் வெளியான முக்கிய தகவல்கள்:

* உலகிலேயே அதிக காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 5ம் இடம். 2023ல் இந்தியாவுக்கு கிடைத்த இடம் 3. இப்போது நிலைமை சற்றே மேம்பட்டுள்ளது. 2023ல் ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் ஆக இருந்த பிஎம்2.5 காற்று மாசுசெறிவு, 2024 ல் 7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இந்தியாவை விட அதிக காற்றுமாசுபட்ட நாடுகள், சாத், காங்கோ, வங்கதேசம், பாகிஸ்தான்.

* உலகிலேயே அதிக காற்றுமாசு கொண்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடில்லி, தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தில் தொடர்கிறது. 

* உலகிலேயே காற்றுமாசு அதிகமான 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. 4 பாகிஸ்தான் நகரங்களும், ஒரு சீன நகரமும், ஒரு கஜகஸ்தான் நகரமும், சாட் நாட்டின் ஒரு நகரமும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

* உலகளவில் காற்றுமாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள 13 இந்திய நகரங்கள், பைர்னிஹாட் (மேகாலயா), டில்லி, முல்லான்பூர்,பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம். கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாப்பர்நகர், ஹனுமன்கார். நொய்டா ஆகும்.

* இந்தியாவின் மோசமான காற்று மாசு மனித ஆயுள் காலத்தில் 5.2 வருடத்தை குறைத்து விடும் ஆபத்து இருக்கிறதாம்.

* டெல்லியில் காற்று மாசு 2023ல் ஒரு கன மீட்டருக்கு 92.7 மைக்ரோகிராம் இருந்தது. அது கிட்டத்தட்ட மாறாமல், 2024ல் ஒரு கனமீட்டருக்கு 91.6 மைக்ரோகிராம் இருந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.