tamilnadu epaper

இமைகளும் சுமையடி

இமைகளும் சுமையடி

பிரிந்து தவிக்கவா

பிரியம் வளர்த்தோம்?


கண்ணீரில் மூழ்கவா

காதலில் மூழ்கினோம்?


இருளில் தடுமாறவா

இதயத்தைப் பகிர்ந்தோம்?


எங்கிருந்து வந்தாய்

என்னையேன் கவர்ந்தாய்?


கண்களில் ஒளியாய்

மனத்தில் மகிழ்வாய்


ஓடியாடித் திரிந்தாய்

ஒரேயடியாய்ப் பிரிந்தாயே!


சமூகத்தின் கிருமி

சாதீய உருமி!


இனபேத ஈட்டியால்

இருதயத்தைக் குத்த


குருதியோடு காதலும்

கொட்டித்தான் போனதோ?


உறுதியது உள்ளத்தில்

ஓங்கி நிமிர்ந்தால்


வெல்ல முடியுமே

எதிர்ப்புக்களை எளிதாய்


தேவதையே தைரியத்தை

ஏந்திடு... எதிர்த்திடு


என்மீதான நம்பிக்கையை

வாளாக்கிப் போரிடு!


நம்மிருவர் நேசத்தைக்

கேடயமாய்க் கொண்டிடு!


வெல்லலாம் வாழலாம்

வேற்றுமை களையலாம்!


காதல்தேவன் காத்திடுவான்

காலமெல்லாம் உடனிருப்பான்!


-முகில் தினகரன்,

கோயமுத்தூர்.