கோபே, மே.21-
உலக பாரா தடகளத்தில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை தீப்தி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று கவனத்தை ஈர்த்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் 100 நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 4-வது நாளான நேற்று இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை ஓட்டப்பந்தய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பெற்றுத்தந்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் டி20 பிரிவில் (மூளை செயல்திறன் குறைபாடு உள்ளவர்கள்) கலந்து கொண்ட தீப்தி ஜீவன்ஜி இலக்கை 55.07 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த பிரிவில் கடந்த ஆண்டு அமெரிக்காவின் பிரியன்னா கிளார்க் 55.12 வினாடிகளில் இலக்கை எட்டியதே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அதை தீப்தி ஜீவன்ஜி முறியடித்தார்.
துருக்கி வீராங்கனை அய்செல் ஒன்டர் வெள்ளிப்பதக்கமும் (55.19 வினாடி), ஈகுவடார் வீராங்கனை லிஜான்ஷிலா அங்குலோ (56.68 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
முன்னதாக தீப்தி தகுதி சுற்றில் 56.18 வினாடிகளில் இலக்கை கடந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போது பாரீஸ் பாரா ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார். 20 வயதான தீப்தி ஜீவன்ஜி தெலுங்கானாவின் வாரங்கலில் பிறந்தவர். இவரது பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள். அறிவுசார் குறைபாடுடைய தீப்தியை, சக கிராமத்தினர் கேலி செய்தனர். இதை கடந்து சென்ற தீப்தி, ஓட்டத்தில் கெட்டிக்காரராக இருந்தார். கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டில் 400 மீ., 'டி20' பிரிவில் தங்கம் வென்றார். அதன்பின் குடும்பத்தின் பொருளாதார நிலை மாறியது. கேலி செய்த சக கிராமத்தினர் தற்போது பாராட்டுகின்றனர். பயிற்சியாளர் ரமேஷ் கூறுகையில், ''வாரங்கலில் இருந்து ஐதராபாத்திற்கு தீப்தியை அனுப்ப பணம் இல்லாமல் தவித்தனர். ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற பின், தீப்தியின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் கண்டனர். தீப்திக்கு கிடைத்த பரிசு தொகையில் இருந்து விவசாய நிலம் வாங்கினர். தீப்தி மனவளர்ச்சி குன்றியவர் என சான்றிதழ் வாங்க பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உதவினார்,'' என்றார்.
சில ஆண்டுக்கு முன்பு தீப்தி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து விட்டார். அந்த அதிர்ச்சியில் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். மற்ற பெண்களை போல் அவரால் இயல்பாக தனது உணர்வுகளை வெளிப்படுத்த இயலவில்லை. என்றாலும் விடாமுயற்சியால் பாரா போட்டிகளில் பங்கேற்று இன்று பெரிய அளவில் சாதித்து காட்டியிருக்கிறார்.
இந்தியாவிற்கு
இரு வெள்ளிப் பதக்கம்
ஆண்களுக்கான வட்டு எறிதலில் எப்.56 பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வீல்சேரில் அமர்ந்தபடி 41.80 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெள்ளிப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். பிரேசில் வீரர் கிளாடினே பாடிஸ்டா (45.14 மீ.) தங்கத்தை வசப்படுத்தினார். கால் ஊனமுற்றவர்கள் மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பால் நடக்க முடியாதவர்கள் கலந்து கொள்ளும் பிரிவு இதுவாகும். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை பாக்கியஸ்ரீ மஹாவ்ராவ் ஜாதவ் 7.56 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 9.11 மீட்டர் தூரம் போட்டு மிரட்டிய சீனாவின் ஜோவ் லிஜூவானை தங்கப்பதக்கம் அலங்கரித்தது.
வருகிற 25-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கத்துடன் பட்டியலில் 12-வது இடம் வகிக்கிறது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் சீனா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 33 பதக்கத்துடன் முதலிடத்திலும், பிரேசில் 12 தங்கம் உள்பட 21 பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.