‘என் அரசியல் வாழ்க்கையில் பழிவாங்கும் எண்ணத்திற்கு இடமில்லை’’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அமராவதியில் உள்ள சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டம்-ஒழுங்கு குறித்து பேசியதாவது: கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில், விஜயவாடாவில் தெலுங்கு தேசம் அலுவலகம் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் தாக்குதல் நடத்தினர். ஆனால் இது தொடர்பாக அப்போதைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜனநாயகத்தில் யாருடைய கட்சி அலுவலகமும் தாக்கப்பட வில்லை. ஆனால், அது ஜெகன் ஆட்சியில் நடந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் பார்த்து கொண்டு இருக்க முடியாது. சிலர் கஞ்சா, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ‘ஈகல்’ எனும் போதை தடுப்பு பிரிவு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தால் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாக வேண்டும். ரவுடிக்களின் அராஜகம் தற்போது எடுபடாது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை கூட கடந்த ஆட்சியினர் விட்டு வைக்க வில்லை. அதனையும் ஆக்ரமித்தனர். ட்ரோன்கள் மூலம் அதனை கண்காணித்து வருகிறோம். இந்த குற்றச்சாடு நிரூபணம் ஆனால், கண்டிப்பாக கடும் தண்டனை வழங்கப்படும். என் அரசியல் வாழ்க்கையில் பழிவாங்கும் படலம் இருக்காது. 26 மாவட்டங்களிலும் சைபர் செக்யூரிட்டி அலுவலகங்கள் ஏற்பாடு செய்து, சைபர் குற்றங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.