tamilnadu epaper

என்னால் முடிந்தது

என்னால் முடிந்தது

கோயிலுக்குள் வந்தபோது அவர் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் தெரியாது. ஆனால் டென் லாக்ஸ் என்று எல்லோரும் அழைப்பார்கள். எல்லோருக்கும் வணக்கம் வைப்பார். பேசுவோரிடம் பேசுவார். மற்ற நேரங்களில் அமைதியாக நடையில் உட்கார்ந்திருப்பார். கோயில் அர்ச்சகர் உட்பட நடை சாத்தும் நேரத்திற்கு டீ சாப்பிடுவார்கள். மெய்க்காவல் ஒருவர் போய் வாங்கிவருவார். அவருக்கும் கொடுப்பார்கள் வாங்கி சாப்பிடுவார். காலை, மாலை இரண்டு வேளையும் வருவார். நடை சாத்தும் நேரம் வரைக்கும் உட்கார்ந்துவிட்டுப் போவார்.

 

            அவர் கோயிலைச் சுற்றிவரப் போனபோது கேட்டேன்.

 

            அது என்ன டென் லாக்ஸ் என்று கூப்பிடுகிறீர்கள்?

 

           அர்ச்சகர் சிரித்தபடி சொன்னார்.. அதுவா சார்.. இருவது வருஷத்துக்கு முந்தி அவருக்கு லாட்டரிச்சீட்டுலே பத்து லட்சம் ருபாய் விழுந்தது. சாதாரணமாக இருந்தவர் பணக்காரர் ஆகிவிட்டார். அதனால அவரோட பெயர் டென் லாக்ஸ் என்றார்கள்.

 

          மெய்க்காவல் சொன்னார்.. லாட்டரிச்சீட்டுலே விழுந்த பணத்தை வச்சி.. இடம் வாங்கி வீடு கட்டி ரெண்டு பசங்களுக்கும் கல்யாணமும் பண்ணி வச்சிட்டாரு.. இப்போ இவர யாரும் கவனிக்க மாட்டேங்குறாங்க.. இவரும் இவரோட மனைவியும் தனியா வாடகைக்கு இருக்காங்க..

 

           அய்யோ.. அப்போ சாப்பாட்டுக்கு? என்றேன்

 

            முதியோர் உதவித்தொகை வருது ரெண்டு பேருக்கும். அத வச்சி ஓட்டறாங்க.. தினமும் ரெண்டுவேளை கோயிலுக்கு வந்துடுவாரு.. இவரோட வீட்டுக்காரம்மா வீட்டு வேலைக்குப் போறாங்க..

 

            அடக்கடவுளே…

 

            ஆனா அதுக்கெல்லாம் மனுஷன் கவலைப்பட மாட்டாரு. தினமும் கோயிலுக்கு வந்து அப்படியே பிரகாரம் சுத்துவாரு.. கையில தீப்பெட்டிய எடுத்துக்குவாரு.. ஒவ்வொரு சாமியாப் பார்த்து அங்க ஏத்தி வச்ச விளக்கு அணைஞ்சிருந்தா அதை ஏத்திவிட்டு வருவாரு. எல்லா விளக்கையும் ஏத்திட்டு வந்து இங்க உக்காந்திடுவாரு..

 

            அவர் வந்ததும் நான் சொன்னேன்.. ஐயா நீங்க பண்றது ரொம்ப நல்லக் காரியம்..

 

           அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அவங்கஅவங்க எத்தனையோ வேண்டுதலோட விளக்கு ஏத்துறாங்க.. காத்துல அணைஞ்சிப்போயிடுது.. ஏதோ நம்மால முடிஞ்சதுன்னு அணைஞ்ச விளக்க எல்லாம் ஏத்திட்டு வரேன்.. யாருக்குமே நாம பயன்படலேன்னு சொன்னாலும்.. நம்மாலயும் சிலது முடியும்னு செய்யணும்லே.. என்றார்.