பூஞ்ச், ஏப். 2
இந்தியா பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவி இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 1ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி இந்தியாவுக்குள் ஊடுருவியது. இதனால் கிருஷ்ணா காட் செக்டாரில் ஒரு கன்னி வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது. இதற்கு நமது ராணுவம் முறையாக பதிலடி கொடுத்தது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் அமைதியை பேணுவதற்கு 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டிஜிஎஸ்எம்ஒ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.
கடந்த 2021ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்தித்து பேசிய போது, வன்முறைக்கு வழிவகுக்கும் கவலைகளுக்கு தீர்வு காண இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.