பெய்ஜிங், பிப். 28
சீனாவை சேர்ந்த வாலிபரை ஏஐ காதலியை கொண்டு ஏமாற்றி பல லட்சம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் புதிய வளர்ச்சி பாதையாக செயற்கை நுண்ணறிவு உள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு வித்திட்டாலும், பல சட்டவிரோத செயல்களுக்கு உதவுவது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே எலான் மஸ்க் போன்ற தொழில் அதிபர்கள், ஏஐ மிகவும் ஆபத்தானது என எச்சரித்து உள்ளனர். மேலும் கவனமாக அதனை கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த வாலிபர், சமூக வலைத்தளங்களில் பெண்களை தேடி உள்ளார். காதலிக்க பெண் தேடியபோது, ஜியாஓ என்ற பெண் அறிமுகம் ஆனார். அந்த வாலிபர், அந்த பெண்ணிடம் தனது மனதை பறிகொடுத்தார். அந்த பெண்ணுடன் நீண்ட நேரம் உரையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தனது காதலை அவர் வளர்த்து வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணோ, வாலிபரிடம் நாம் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என கூறி உள்ளது. மேலும் தனது உறவினருக்கு உடல் நலம் சரியில்லை என்றும், மருத்துவ செலவுக்கு பணம் தேவை என்றும் கூறி வாலிபரிடம் பணத்தை பறித்து வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த வாலிபரிடம், அந்த பெண் ரூ.24 லட்சத்தை பறித்து உள்ளார். அந்த சமயத்தில் தான், தான் ஒரு ஏஐ காதலியிடம் ஏமாற்றப்பட்டதை வாலிபர் அறிந்தார்.
உடனே அவர் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்து உள்ளார். இந்த விவகாரத்தில், ஏஐ கொண்டு மர்ம கும்பல் பெண் குரல் பேசி, சீன வாலிபரிடம் நடந்து கொண்டுள்ளனர். அவற்றை எல்லாம் உண்மை என நம்பிய சீன வாலிபர், ஏஐ செயலியில் உருவான காதலியை நம்பி பல லட்சங்களை இழந்தது தெரிந்தது. அந்த கும்பல் இதையே தொழிலாக வைத்து இருந்ததும் தெரியவந்துள்ளது.