எரிமலையை அவிக்க
சிறுதூறலைப் பொழிந்துவிட்டு
யுகாந்திரமாய்க் களைத்திருக்கையில்
நாழிகை இளைப்பாறச் சொல்லி
அடுத்த யாத்திரைக்குத்
துரிதப்படுத்திவிட்டு
பற்றவைத்த ஒற்றைத் தீக்குச்சியை
இருட்குகையின் நெடுவழியில்
கை தந்துவிட்டு
வந்துவிடுவாய்தானே என்ற
விடை எதிர்பாராக் கேள்வியுடன்
கணத்தில் விரைந்து போயிருந்தாய்
ஒரு கடல் மற்றொரு கடலுக்குள்
பொருந்திவிடுவதைபோல
அதே பெயரில் ஊர்
அதே பெயரில் வீதி
அதே இலக்கத்தில் கதவு
ஒரு கரை பிறிதொரு கரைக்குள்
பொருந்துவதில்லை என்பதாய்
வேறெவரும்
நீயாகிவிடமாட்டார் தானே.
-கீர்த்தி