tamilnadu epaper

ஒரு கவிஞனின் கதை!

ஒரு கவிஞனின் கதை!


ஒட்டுமொத்த...

உணர்ச்சிகளும்

செத்துவிட்ட நிலையில்

எழுத வேண்டுமாம்

எழவே வழி இல்லை

இனி எங்கே எழுதுவான்

வாழ்வில்

எழுச்சி கவிதை?


ஜீவன் செத்துவிட்ட...

அவனின் வெறும் சரீரம்

வீணையை மீட்டி

தேவனுக்கு எங்கே பாடும்

தெய்வீக ராகம்?


தன்மானமே இங்கு...

தடுமாறும் பொழுது

எங்கே எழுவான் 

இனமானம் காக்க

இமயத்தின் புயலாய்?


முயன்றால் முடியாதது...

இல்லை என்றாலும்

மரமே முறிந்து விட்ட பின் 

இலையாய் எங்கே 

துளிர்க்கப் போகிறது

அவனின் வாழ்வு?


கலங்கரை விளக்கமே...

காற்றினில்

விழுந்த பின்

தீபம் அணையாமல்

நிலை நிற்கும் என்றால்

யார்தான் நம்புவது?


எதிர்பாராமல்...

வந்த புயல் ஒன்று

கவிழ்த்துப் போட்டு

கண்ணீர் கடலில்

மூழ்கி விட்ட நிலையில்

ஆற்றின் கரை 

சேருமா அவனின் படகு?


தன்னுயிர் ஓவியமே...

உருக்குலைந்த

கடைசி நேரத்தில் 

மீண்டும் ஒரு காதல்

என்றால் ஏற்குமா

அவனின் மனம்?


நம்பிக்கையை மட்டுமே...

எதிர்பார்க்கும் நாளில் 

அவனிடம் நம்பி

கையை கூட தர மறுக்கும்

மனிதர்களோடு தான்

உயிர் வாழ்கிறேன்

யாருமற்ற அனாதையாய்?


வீதியில் நடந்த 

வாகனம் விபத்தால்

விதி வழியே

பயணிக்கிறாள்

படுத்த படுக்கையாய்

மனையாள் அவளும்

நீண்ட நாளாய்

மனநோயில் அவனும்!


சம்சாரம் அவள்...

சாய்ந்து கிடக்கும்

நினைவுகளை

எப்போதும் எழுகிறது

உள்ளத்தில்

சந்தோஷ சங்கீதம்

கேட்கவே வழியில்லை 

அவனது இல்லத்தில்!



கவிஞர்.

ஜெ.ம.புதுயுகம்

பண்ணந்தூர்