tamilnadu epaper

கள்ளக்குறிச்சியில் 4-–ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் 4-–ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, ஏப்.2-


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்கள் நலன் சார்ந்த அரசுப் பணிகளை தரமான முறையில் செய்திட வலியுறுத்தி அண்ணா தி.மு.க. சார்பில் 4-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தி.மு.க. ஆட்சியில், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆட்சியாளர்களின் இத்தகைய போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.


அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம், ரிஷிவந்தியம் ஒன்றியம், வானாபுரம் ஊராட்சி, பகண்டை கூட்டு ரோடில் கட்டப்பட்டுவரும் பயணியர் நிழற்கூடத்தின் மேல் பகுதி, கட்டி முடிப்பதற்கு முன்பாகவே சரிந்து விழுந்துவிட்டதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டு வருவதாகவும், அதேபோல், திட்டப் பணிகள் பலவற்றில் ஆளும் கட்சியினரால் பல்வேறு முறைகேடுகள் நிகழ்த்தப்படுவதாகவும் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.


இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்கள் நலன் சார்ந்து நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை, ஆதாய நோக்கத்துடன் தரமற்ற முறையில் செய்து வருவதை கண்டும் காணாமல் இருந்து வரும் தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும்; மக்களுக்குப் பயன்படும் வகையில் அரசுப் பணிகளை தரமான முறையில் செய்திட வலியுறுத்தியும், அண்ணா தி.மு.க. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சார்பில், வருகின்ற 4 ந் தேதி வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், ரிஷிவந்தியம் ஒன்றியம், வானாபுரம் ஊராட்சி, பகண்டை கூட்டு ரோட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இரா. குமரகுரு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.