tamilnadu epaper

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து; 17 பேர் பலி

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து; 17 பேர் பலி

குஜராத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 17 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகருக்கு அருகிலுள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. தொழிற்சாலையில் உள்ள வெடிமருந்துப் பிரிவில் ஏற்பட்ட வெடிப்பு விபத்துக்கான காரணம் என்று நம்பப்படுகிறது. இந்த வெடிப்பில் அருகிலுள்ள கிடங்கு சேதமடைந்தது. வெடிப்பு ஏற்பட்டபோது தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எத்தனை தொழிலாளர்கள் அங்கு இருந்தனர், எத்தனை பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. காயமடைந்த ஐந்து தொழிலாளர்கள் தீசா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ ஏப்லர் 1 செவ்வாயன்று காலை 9.45 மணியளவில் தீசா தொழில்துறை தாலுகா பகுதியில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. குண்டுவெடிப்பின் தாக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் முழு தொழிற்சாலையும் இடிந்து விழுந்தது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 17 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர், அவர்களில் இருவர் தீசா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்ற இருவர் பாலம்பூர் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிற்சாலையின் இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாராவது சிக்கியுள்ளார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்” என்று பனஸ்கந்தா மாவட்ட நீதிபதி மிஹிர் படேல் தெரிவித்தார். நகராட்சி தீயணைப்பு குழுவினர் தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.