இடவலமாய் தலையாட்டினான் குமார்.


 "அதானே... எப்படி" />

tamilnadu epaper

குமாரும் கிரிக்கெட்டும்

குமாரும் கிரிக்கெட்டும்


   வீட்டிற்குள் நுழைந்த வாசுதேவன் தன் மகன் குமாரிடம், "என்னப்பா... ஏழெட்டு காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டிருந்தியே அட்மிஷன் கார்டு வந்திருக்கா?"


   இடவலமாய் தலையாட்டினான் குமார்.


 "அதானே... எப்படி வரும்?... அந்த அளவுக்கா நாம மார்க் வாங்கியிருக்கோம்?" 


 "அப்பா.. சும்மா ஏதாச்சும் சொல்லாதீங்க நான் 70% வாங்கியிருக்கேன்"


   அதைக் கேட்டு ஓங்கிச் சிரித்த வாசுதேவன், "டேய்... அங்கங்க 98%, 99% வாங்கினவனெல்லாம் பிடிச்ச காலேஜ்ல.... பிடிச்ச கோர்ஸ்... கிடைக்காம அல்லாடிட்டிருக்கானுங்க... உன்னோட 70% மார்க்கைக் கொண்டு போனா உள்ளாரவே விட மாட்டாங்க!"


   தந்தை சொன்ன அந்த நியாயமான வாதத்திற்கு பதிலேதும் சொல்ல முடியாத குமார் அமைதியானான்.


  "அது சரி... உன் கூட எப்பவும் ஒருத்தன் சுத்திகிட்டு இருப்பானே?... அவன் பேரென்ன?... ஆங்... விஸ்வம்!... அவன் என்ன ஆனான்?...பாஸாவது ஆனானா?... இல்லை புட்டுக்கிச்சா?" அதே கிண்டல் தொடர்ந்து வாசுதேவனிடம்.


 "அவன் பாஸாகி... காலேஜில் கூட சேர்ந்துட்டான்"


 "என்னது?... காலேஜ்ல சேர்ந்துட்டானா?... எப்படி எத்தனை பர்சண்டேஜ் வாங்கினான்?".


  "63%."


 "அப்புறம் எப்படிடா அவனுக்கு அட்மிஷன் கொடுத்தாங்க?"


 "அவன் நல்ல கிரிக்கெட் பிளேயர்!.. மாவட்ட அளவில பல மேட்ச்ல விளையாடி... நிறைய சான்றிதழ்களும் நிறைய கோப்பைகளும் வாங்கி வச்சிருக்கான்!... அதனால ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அவனுக்கு அட்மிஷன் கொடுத்திருக்காங்க"


  ஹும்... தனக்கு படிப்பு சுமார்தான்னு தெரிஞ்சுக்கிட்டு... அந்தப் பையன் கிரிக்கெட்ல டெவலப் ஆகி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அட்மிஷன் பிடிச்சிருக்கிறான்.....நீயும்தான் இருக்கியே தண்டச்சோறு"


"விருட்"டென்று தலையைத் தூக்கி தந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தான் குமார். அவன் நினைவுகள் ஆறேழு வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சியை திரும்பவும் அசை போட்டன.

 ******


 "டேய்... இதெல்லாம் என்ன கருமம்டா?... இதையெல்லாம் எதுக்குடா இங்கே கொண்டு வந்து வச்சிருக்கே?' என்று ஸ்டோர் ரூமில் குமார் வைத்திருந்த கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்புகள், கிளவுஸ்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கேட்டார் வாசுதேவன்.


  "அப்பா... அது எங்கே கிரிக்கெட் டீமோட மெட்டீரியல்ஸ்... நான்தான் டீம் கேப்டன்! அதான் நம்ம வீட்ல கொண்டு வந்து வச்சிருக்கேன்!"


  "என்னது கிரிக்கெட்டா?... நீதான் கேப்டனா?... டேய்... படிக்கிற வேலையை மட்டும் ஒழுங்காப் பாரு... நீயொண்ணும் சச்சின் டெண்டுல்கர் ஆக வேண்டாம்!" சொல்லி/விட்டு குமார் கதறக் கதற அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்று தரையில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தினார் வாசுதேவன்.

  

  "இனிமேல் கிரிக்கெட் அது இதுன்னு பசங்க கூட சேர்ந்துக்கிட்டு காட்டுக்குள்ள போனே?... இதுகளை எரிச்ச மாதிரி உன்னையும் எரிச்சிடுவேன்"

*******


பழைய நினைவுகளிலிருந்து மீண்ட குமார், "அப்பா நான் கோட்டை விட்ட அந்த கேப்டன் பதவியை கைப்பற்றிய விஸ்வம்தான்... இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அட்மிஷன் பெற்றுள்ளான்" என்பதை தந்தையிடம் சொல்ல நினைத்து


சொல்லாமலே விட்டு விட்டான் குமார்.



-முகில் தினகரன்,

கோயமுத்தூர்