tamilnadu epaper

குலதெய்வத்துக்கு 500 ஆடு பலியிட்டு விருந்து

குலதெய்வத்துக்கு 500 ஆடு பலியிட்டு விருந்து


பெரம்பலுார், மே 22–


பெரம்பலுார் அருகே, 500 ஆடுகள் பலியிட்டு, சுவாமிக்கு படைத்து விருந்து வைத்த வினோத திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது. 

பெரம்பலுார் மாவட்டம், சித்தளி கிராமத்தில் உள்ள அய்யனார், கரைமேல் அழகர், நல்லதாய் அம்மன், புலி முகத்து கருப்பையா, பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் ஆகிய சுவாமிகளை குலதெய்வமாக கொண்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கின்றனர். 

இவர்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்காக உற்றார் உறவினர்களுடன் சித்தளி கிராமத்திற்கு வந்து திருவிழா நடத்துவது வழக்கம். 

அதன்படி, சித்தளி கிராமத்திற்கு வந்து, தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர். 

அய்யனார் மற்றும் கரைமேல் அழகர் கோவிலுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்த மக்கள், நல்ல தாய் அம்மன் கோவிலில் காலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்களை பலி கொடுத்து வழிபாடு செய்தனர். பத்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் வரிசையில் நின்று ஆடுகளை பலி கொடுத்தனர். 

 பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் அனைத்தையும் சமையல் செய்து உற்றார் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு விருந்து கொடுத்தனர்.