நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீக்கும் திட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அளித்த பதில் வருமாறு:
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்கும் திட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. தேசிய நெடுஞ்சாலையின் எந்தப் பிரிவையும் பயன்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி பயனீட்டாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான விதிகள் 2008-ன்படி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட கட்டணச் சலுகை அதற்கான கால அவகாசம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும். சலுகை காலம் முடிந்த பிறகு, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தின்படி அரசு அல்லது செயல்படுத்தும் அதிகாரியால் தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள், சுரங்கப்பாதை அல்லது புறவழிச்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் ஆண்டுதோறும் திருத்தியமைக்கப்படும்.
கட்டமைத்தல், செயல்பாடு, மாற்றியமைத்தல் ஆகிய திட்டங்களைப் பொறுத்தவரை, சலுகைக் காலம் முடிவடைந்த பிறகு, சுங்கச்சாவடிகள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின்னர் பயன்பாட்டுக்கு கட்டணத்தை மாநில அரசால் இயக்கப்படும் முகமைகள் மூலம் வசூலிக்கப்படுகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களை பயன்படுத்துவோர் கட்டணம் நிரந்தரமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வசூல் செய்யப்பட்ட தொகை, சுங்கச்சாவடிகளை குறைக்கவோ அல்லது மூடுவது தொடர்பாக தணிக்கை செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.