tamilnadu epaper

சைவ பிள்ளைமார் வீடுகளில்

சைவ பிள்ளைமார் வீடுகளில்

எங்க திருநெல்வேலியில் சைவ பிள்ளைமார் வீடுகளில் வெள்ளிக் கிழமை எப்படி சாம்பார், அவியல், துவரம், பொரியல் உண்டோ அதே போல வாரம் ஒரு நாள் காய்கறி காய்கறி சேர்க்காமல் சமைப்பது கூட உண்டு.


புளித்தண்ணி + பொரிகடலைத் துவையல், சுட்ட அப்பளம், வத்தல் நல்ல காம்போ. அம்மாவிற்கு பல வகை காய்கறி சமைக்க இயலாத போதும் இதை செய்வது உண்டு. அன்று மோர் சாதம் மிதுக்கு வத்தல், கொத்தவரங்கா வத்தல், அன்றே ஃபிரஷ்ஷாக போட்ட மாங்கா ஊறுகாய் அல்லது நார்த்தங்கா ஊறுகாய் - இப்படி போகும் மத்யானம் சாப்பாடு.


பொரிகடலை நிறைய, கொஞ்சம் தேங்காய் துருவியது, பச்சை மிளகாய், உப்பு, ரண்டு பூடு பிருபிரு என அறைத்தால் இந்த துவையல். தண்ணி திட்டமா சேர்க்கவும். இல்லைனா சட்னி மாதிரி ஆகிவிடும் ருசி இருக்காது. இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து தொட்டுக்கொள்ள புளித்தண்ணி வைத்து குழந்தைகளுக்கு கூட நாம் சாப்பாடு தருவோம். அந்த அப்பளமும் வத்தலும் ரொம்ப நல்ல கம்பைன் ஆகும். இப்படி துவையல் சாதமாக சாப்பிடுவதாக இருந்தால் கேரட் சம்பல் பீன்ஸ் துவரம் இதற்கு நன்றாக இருக்கும். 


இப்பொழுது புளித்தண்ணிக்கு வருவோம். உப்பிட்டு தண்ணியாக புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய் அதில் கடுகு உளுந்தம் பருப்பு, சிறிது வெந்தயம் மிளகாய் வற்றல் கிள்ளியது கெட்டி பெருங்காயம் போட்டு எண்ணெயில் பொரித்து அதோடு இந்த புளித் தண்ணியை ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.இதற்கு எந்த பொடியோ வெங்காயமோ நிலக்கடலையோ எதுவும் தேவையில்லை. நல்லெண்ணையோடு இந்த புளித் தண்ணி கமகமக்கும். மிளகாய் வற்றல் காரம், வெந்தயத்தின் இதமான கசப்பு, பெருங்காயத்தின் மணம் புளியின் சுவை என்று இந்த குழம்பு இருக்கும். இது சற்றே ஆறின சாதத்தில் விட்டு நல்லெண்ணெய் கமகமக்க அப்பளம் கூழ் வத்தல், வெங்காய வத்தலுடன் டாப் கிளாஸ் காம்பினேஷன். பொரிகடலை துவையலை தொட்டு கொள்ளவும்.


வாரம் முழுவதும் காய்கறிகள், பருப்பு, தேங்காய் என சேர்த்து சாப்பிட்ட வயிற்றுக்கு இந்த உணவு மிக மிக நன்றாக இருக்கும். நாக்கிற்கும் நல்ல சுவை தரும். எளிமையான உணவு. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் உணவு bore அடிக்கையில் இப்படி மாற்று வழியாக கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் பாருங்களேன்!



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி