சென்னை, மே 22
தமிழகத்தில் இண்டியா கூட்டணி ஆட்சி தான் வரும் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 34ம் ஆண்டு நினைவு நாள் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அனுசரிக்கப்பட்டது. ராஜீவ் உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழியை ஏற்று ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
கைவிடாதீர்
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
“பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று. தொடர்ந்து ராகுல் காந்தியும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தற்பொழுது ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு கேள்விகளை ராகுல் வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு மோடி அரசிடம் பதில் இல்லை. பயங்கரவாதத்திற்கு தீர்வு காணாமல் இதை மோடி அரசு கைவிடக்கூடாது.
வலிமையான கோட்டை
எல்லாம் முதலமைச்சர்களும் தான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதை காங்கிரஸ் வரவேற்கிறது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் வலிமையான கோட்டை போல் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இருக்கும் கூட்டணி போன்று வலிமையான கூட்டணி எங்காவது உண்டா? அடுத்த ஆட்சியும் இங்கு இண்டியா கூட்டணி ஆட்சி தான் வரும்.
அதிமுக பாஜ கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது. கொள்கை கூட்டணி கிடையாது. அவர்களுக்குள்ளேயே எந்த பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம். நேற்று ஜெயலலிதாவை குற்றவாளி என்று கூறிய அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதா பற்றி காங்கிரஸ் இயக்கம் என்றைக்காவது தரம் தாழ்ந்த வகையில் பேசியிருக்கிறதா? ஆனால் அவர்களை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசியவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். எனவே இது சந்தர்ப்பவாத கூட்டணி. ஆனால் எங்கள் கூட்டணி உறுதியான கொள்கை கூட்டணி நிலையான கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.