சென்னை, மே 6-
திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும், நோக்கத்தில் தெற்கு ரயில்வே புதிய சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை, மே 5 முதல் மே 31 வரை, வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து மாலை 3.45 மணி க்கு புறப்படும் இந்த ரயில், நாகர்கோவிலுக்கு இரவு 9.05 மணி (21.05) சென்றடையும். திண்டுக்கல், அம்பத்துறை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை ஜங்ஷன், திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சிமணியாச்சி, நறைக்கிணறு, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
கோயம்புத்தூர்& - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் 16322 எண் ரயில், திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் ரோடு - வாடிப்பட்டி இடையே சாலை புதுப்பிப்பு பணிகள் மே 31 வரை நடைபெறும். இதனை ஈடுகொடுக்கவே இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தவிர, வியாழனில் மட்டும் ரத்து செய்யப்பட்ட 16322 ரயில் வழக்கம்போல் இயக்கப்படும்“ என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.