புழுதி பறக்க ஆடி வீரர்களை பறக்க விட்ட காளைகள்! கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் துணிகளை காலில் கட்டிக்கொண்டு விடாமுயற்சியுடன் காளைகளை அடக்கிய வீரர்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் பாராட்டினர்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியில் 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. திருப்பத்தூர் பெரிய கண்மாய் கரையில் அமைந்துள்ள அருள்மிகு குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 காளைகளும், ஒவ்வொரு காளைகளை அடக்குவதற்கு 9 மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு காளைகளையும் அடக்குவதற்கு 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 20 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் மாடுகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு ரூ.7000 மற்றும் சில்வர் அண்டா, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர். காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரர்களுக்கு வட மஞ்சுவிரட்டு நடைபெற்றது வளாகத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அக்னி வெயிலில் தாக்கம் அதிகம் இருந்ததால் திடலில் நிக்க முடியாத வீரர்கள் கீழே கிடந்த துணிகளை எடுத்து காலில் சாக்ஸ் அணிவது போல் அணிந்து கொண்டு களத்தில் மாடுகளை அடக்கினர். இதில் காளைகள் புழுதி பறக்க வீரர்களை பந்தாடியது. குத்து பட்டாலும் பரவாயில்லை என வீரர்கள் காளைகளை அடக்கியதை, மஞ்சுவிரட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி, விசில் அடித்து ரசித்தனர். விழா ஏற்பாடுகளை தம்பிபட்டி கிராமத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.