tamilnadu epaper

பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்

பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக சன்னிதானம் முன்பு கொடி ஏற்றப்பட்டது.

தேனி: சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக இன்று (ஏப்.2) கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆராட்டு (சுவாமி புனித நீராடல்) நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று (ஏப்.1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திருவிழா கொடியேற்றத்துக்கான கயறு, குதிரை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி உள்ளிட்டவை குளங்கா ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் இருந்து அலங்கார ஊர்தியில் நேற்று மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது.


இதனைத்தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கோயில் சுத்திகரிப்பு பூஜை நடைபெற்றது.பின்பு கொடிக்கு தந்திரி பிரம்மதத்தன் ராஜீவரு சிறப்பு பூஜைகள் நடத்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்பு தேங்காயில் நெய் தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் கொடிக்கம்பத்துக்கும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களின் சரணகோஷங்களுடன் தந்திரி பிரம்மதத்தன் ராஜீவரு கொடியேற்றினார்.




திருவிழாவின் ஒவ்வொரு நாளும் நெய் அபிஷேகம், சுவாமி யானை மீது வலம்வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். விழாவின் உச்சநிகழ்வாக 11-ம் தேதி காலை 7மணிக்கு சுவாமி யானை மீது சுவாமி எழுந்தருள உள்ளார். பின்பு பம்பை நதியில் ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சி (ஆராட்டு) நடைபெறும். பின்பு நதிக்கரையில் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு சுவாமி சந்நிதியில் எழுந்தருள உள்ளார்.


இதன்பின்பு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடையும். அடுத்த இரண்டு நாட்கள் உத்திர திருவிழா நடைபெறும். தொடர்ந்து சித்திரை மாத மாதாந்திர பூஜை தொடங்குவதால் ஏப்.18-ம் தேதி வரை வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. பங்குனி உத்திர ஆராட்டு விழா தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.