வாஷிங்டன், மார்ச் 18
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்கள் நாளை காலை பூமியில் கால் பதிப்பார்கள்.
நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார் லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி நிலையத்திலேயே தங்க நேர்ந்தது. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது.இதனையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் குரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த 15 ந்தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்ய நாடுகளைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்பட்டு பூமியை நோக்கி புறப்பட்டுள்ளது. இதில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் நிக் ஹாவுக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமியை நோக்கி பயணத்தை துவங்கியுள்ளனர். அங்கு நடக்கும் நிகழ்வுகளை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது தொடர்பான வீடியோவை நாசா வெளியிட்டு உள்ளது.
இதனையடுத்து விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைத்தல் பணி நடைபெறும். இதனால் பூமிக்கு திரும்பும் பணி எளிமையடையும். இதனை தொடர்ந்து விண்வெளி வீரர்கள் தரை இறங்குதல் நடைபெறும். இதன்படி, அவர்கள் நாளை அதிகாலை 3.30 மணியளவில் (இந்திய நேரப்படி) பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.