ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் உலக பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சுழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உலகிற்கே உணவளித்து, உயிர் காக்கும் ஆதி தொழிலான விவசாயமும், அது சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழிலும் அழிந்து வருகின்றன. இதனைத் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஐ.நாவின் குழந்தை நல நிறுவனம் யூனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் ஒவ்வொரு நாளும் 700க்கும் மேற்பட்ட சிறார்கள் இறக்கின்றனர். வரும் 2040க்குள் ஒரு வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் குழந்தைகள், தீவிர மாசுக்கேடு உள்ள பகுதிகளில் வாழ்வார்கள்.
மேலும் உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வாழ்வார்கள். உலகம் முழுவதும் ஏறத்தாழ பத்து இலட்சம் குழந்தைகள், பிறந்த நாளன்றே இறக்கின்றன. மேலும், 16 இலட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமி பாதுகாப்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இயற்கை பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.
நாம் இங்கு நன்றாக வாழ வேண்டும் என்றால் பூமியை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். மாற்றம் என்பது ஒவ்வொரு தனிநபராலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தொகுப்பு: பா. சீனிவாசன், துணைத் தலைவர், எக்ஸ்னோரா அமைப்பு, வந்தவாசி.