tamilnadu epaper

போப் பிரான்சிஸ்-க்கு இருமல், வாந்தி, மூச்சுத் திணறல்: வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ்-க்கு இருமல், வாந்தி, மூச்சுத் திணறல்: வாடிகன் தகவல்

ரோம்:

போப் பிரான்சிஸ், இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.


கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த பிப். 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த பிப். 22ம் தேதி ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது.


ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவது உடல்நிலை தொடர்பாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "போப் ஆண்டவருக்கு வெள்ளிக்கிழமை மதியம் மூச்சுக்குழாய் பிடிப்பு (bronchospasm) என்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாந்தி ஏற்பட்டது. மேலும், அவரது சுவாச நிலை திடீரென மோசமடைந்தது.


அவருக்கு உடனடியாக மூச்சுக்குழாய் ஆஸ்பிரேஷன் (அவரது சுவாசப்பாதைகள் சுத்தம் செய்யப்பட்டன) செய்யப்பட்டது. மேலும், அவருக்கு இயந்திர காற்றோட்டம் வழங்கப்பட்டது, இது அவரது ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


போப் பிரான்சிஸுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களிடமிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக உற்சாகமான அறிக்கைகள் வந்த நிலையில், இந்த அறிக்கை ஒரு பின்னடைவைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் போப் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.