tamilnadu epaper

மேலே ஒருத்தன் இருக்கான் நாராயணா!

மேலே ஒருத்தன்    இருக்கான் நாராயணா!


நேரம் இரவு 12:30.


சிறிதும் சொதப்பல் இல்லாமல், வேலைக்காரன் சோமு மற்றும் வாட்ச்மேன் சண்முகம் ஆகியோர் உதவியுடன், தங்கள் முதலாளி நீலகண்டன் ஐயாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்து முடித்து விட்டு, 

பாடியைக் காரின் பின் இருக்கையில் கிடத்திய டிரைவர் வேலு தன் சகாக்களுடன் பாடியை ஏரியில் வீசியெறியப் பறந்து கொண்டிருந்தான்.


பனி போர்த்தியிருந்த சாலையில் மனித நடமாட்டமே இல்லை.


சாலையின் இரு புறமும் சரிவான பள்ளங்கள். அதனுள் பெரிய பெரிய மரங்கள்.


அந்த மரங்களின் உச்சியிலிருந்து அவ்வப்போது ஏதோ பெயர் தெரியாத பறவைகளின் வினோதக் கத்தல்.


  "என்ன வேலு... இன்னும் ரொம்ப தூரம் போகணுமா?" சோமு கேட்க.


  "ஆமாம்... சுத்தமா ரெண்டு கிலோமீட்டர் போனால்தான் ஏரி வரும்!"


  "இவ்வளவு தூரம் வர்றதுக்கு பதிலா அங்கேயே ஏதாவது கிணத்திலேயோ... குளத்திலேயோ பாடியப் போட்டிருக்கலாம்!" இது வாட்ச்மேன் சண்முகம்.


  "எதுக்கு?... கையும் களவுமாய் மாட்டறதுக்கா?" கோபமாய் சொன்னான் வேலு.


கார் தன் வேகத்தை அதிகப்படுத்தியதும் பக்கவாட்டு மரங்கள் பிசாசு வேகத்தில் பறந்தன.


டிரைவர் வேலு தன் காதில் சொருகி இருந்த பீடியை எடுத்து உதட்டில் சொருகினான்.


  "குளிருக்குக் கொஞ்சம் புகையை உள்ளார தள்ளினால்தான் சுகமாயிருக்கும்!" உதட்டில் தொங்கும் பீடியுடன் சொன்னவன், காரின் டாஷ்போர்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து, இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கிலிருந்து எடுத்து பீடியைப் பற்ற வைக்க முயல,


எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பெரிய சைஸ் பறவை டிரைவர் இருக்கையின் முன்புறக் கண்ணாடியில் "தடால்" என்ற சத்தத்தோடு மோத.


கார் கட்டுப்பாட்டை இழந்து இடப்புறப் பள்ளத்தில் சரேலென்று இறங்கி, தாறுமாறாய் ஓடி, ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நின்றது.


டிரைவர் இருக்கையிலிருந்த வேலுவும், அவனருகில் அமர்ந்திருந்த சோமுவும் சில வினாடிகள் துடித்து விட்டு அடங்க,


பின் இருக்கையில் பாடிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் சண்முகம், முன்புறம் பாய்ந்து நெஞ்சில் பலத்த அடி வாங்கி மரணிக்க,


பின் இருக்கையில் கிடத்தப்பட்டிருந்த பெரியவரின் சடலம், மரத்தின் மீது மோதிய அதிர்ச்சியில் திறக்கப்பட்ட பின்பு கதவு வழியே வெளியே தெறித்து, மண்ணில் குப்புற விழ,


விழுந்த வேகத்தில் தற்காலிகமாக இயக்கத்தை நிறுத்தி இருந்த பெரியவரின் இருதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.

*******

மறுநாள், செய்தித்தாளில், "ஏரி செல்லும் பாதையின் இடப்புறப் பள்ளத்தில் கார் உருண்டதில் ஒரு பெரியவர் மட்டும் உயிர் பிழைக்க, அவருடன் பயணித்த மூவரும் உயிரிழந்தனர்!" என்ற செய்தி வெளியாகியிருந்தது.



முகில் தினகரன்,

கோயம்புத்தூர்.