tamilnadu epaper

ரியான் பராக் 3-வது இடத்தில் விளையாடுவதற்கு இதுதான் காரணம் - ராகுல் டிராவிட்

ரியான் பராக் 3-வது இடத்தில் விளையாடுவதற்கு இதுதான் காரணம் - ராகுல் டிராவிட்

கவுகாத்தி,


10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த தொடக்கு முன்னதாக ராஜஸ்தான் கேப்டனாக செயல்பட்டு வந்த சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாடி வருகிறார்.


சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தான் அணியை ரியான் பராக் வழிநடத்தி வருகிறார். அவர் முதல் 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரியான் பராக் நடப்பு தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முறையே 4 மற்றும் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்திருந்தார்.


கடந்த ஆண்டு நான்காம் இடத்தில் சிறப்பாக விளையாடிய அவரை தற்போது மூன்றாவது வரிசையில் களமிறக்க என்ன காரணம்? என்பது குறித்த தகவலை தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு ரியான் பராக் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடியிருந்தார். அதன் காரணமாகவே தற்போது அவரை மூன்றாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளோம்.


உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரியான் பராக் எங்களது அணியில் உள்ள மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் எவ்வளவு பந்துகளை சந்தித்து விளையாடுகிறாரோ அந்த அளவிற்கு ரன்கள் வரும். அது அணிக்கும் நல்லது எனவேதான் நான்காவது இடத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தற்போது மூன்றாவது இடத்தில் வாய்ப்பு வழங்கியுள்ளோம்.


மூன்றாவது இடத்தில் இறங்கும் போது அவருக்கு கூடுதலாக நேரம் கிடைக்கும் என்பதனால் அந்த முடிவை எடுத்து அவருக்கு டாப் ஆர்டரில் ப்ரமோஷன் வழங்கியுள்ளோம். நிச்சயம் அவரிடம் உள்ள திறமைக்கு எங்களது அணிக்காக அவர் பல போட்டிகளில் வெற்றி பெற்று தருவார். இவ்வாறு அவர் கூறினார்.