அமெரிக்க அணி வீரர்கள் | படம்: ட்விட்டர்
ஹூஸ்டன்: வங்கதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரு அணிகளும் 2-வது டி 20 ஆட்டத்தில் ஹூஸ்டன் நகரில் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் மோனக் படேல் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். ஆரோன் ஜோன்ஸ் 35, ஸ்டீவன் டெய்லர் 31 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், முஸ்டாபிஸுர் ரஹ்மான், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 145 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 17 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது.
சவுமியா சர்க்கார் 0, தன்ஸித் ஹசன் 19, நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 36, தவூஹித் ஹிர்தோய் 25, மஹ்மதுல்லா 3, ஜாகர் அலி 4 ரன்களில் நடையை கட்டினர். ஷகிப் அல் ஹசன் களத்தில் இருந்த நிலையில் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. 18-வது ஓவரை வீசிய அலி கான் முதல்பந்தில் ஷகிப் அல் ஹசனை (30) ஆட்டமிழக்கச் செய்தார். 3-வது பந்தில் தன்ஸிம் ஹசன் ஷகிபை(0) வெளியேற்ற ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. இதையடுத்து களமிறங்கிய ரிஷாத் ஹோசைன் கடைசி பந்தில் பவுண்டரி விளாசினார்.
19-வது ஓவரை வீசிய நேத்ரா வல்கர் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் ஷோரிபுல் இஸ்லாமை (1) வெளியேற்றினார். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சிய நிலையில் கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தன. அலி கான் வீசிய இந்த ஓவரில் முதல் பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்ட நிலையில் அடுத்த பந்தை ரிஷாத் ஹோசைன் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை ரிஷாத் ஹோசைன் (9), ஸ்கூப் ஷாட் விளையாட முயன்றபோது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.
முடிவில் 19.3 ஓவர்களில் வங்கதேச அணி 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி தனது கடைசி 7 விக்கெட்களை 60 ரன்களுக்கு கொத்தாக தாரைவார்த்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமெரிக்கா டி20 தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அந்த அணி தரப்பில் அலி கான் 3 விக்கெட்களை வீழ்த்தினார். நேத்ரா வால்கர், ஷாட்லி வான் ஷால்க்விக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். ஐசிசி முழு நேர அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக அமெரிக்கா டி20 தொடரை வெல்வது இதுவே முதன்முறையாகும்.