'உங்கள் கையில்தான் வருங்கால இந்தியா' என்ற மணிராம் கார்த்திக்கின் சிறுகதை பயனுள்ள நல்ல அறிவுரை சொல்லும் கதையாக இருந்தது. 'மதிப்பெண் மட்டும் வாழ்க்கைய தீர்மானிக்காது. ஒவ்வொருவரின் நம்பிக்கை, துணிச்சல் அவர்களின் நல்ல தைரியமான முடிவுதான் வாழ்க்கையே தீர்மானிக்கும். மனதளவில் அனைவரும் தைரியத்துடன் வெற்றி தோல்வியை எதிர் கொள்ள வேண்டும்' என்ற கருத்து இன்றைய மாணவர்களுக்கான சரியான கருத்தாகும்.
முகில் தினகரனின் 'தாய் மாமன்' சிறுகதை உள்ளத்தை உருக்கும் உயர்ந்த கதைதான். ஆனாலும், இந்த கதை மறுபடியும் பிரசுரமாகியிருக்கிறது.
நிரஞ்சனாவின் 'யாதுமாகி நின்றவள்' தொடர்கதை இந்த வாரம் வர்னணைகளாலும், எண்ண ஓட்டங்களாலுமே சென்றுவிட்டது. அடுத்த வாரமாவது ஏதாவது நடக்குமாயென்று பார்க்க வேண்டும்.
திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில் என்னும் பிரசித்திப்பெற்ற திருத்தலத்தை பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. புற்றுருவாக இருப்பதால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. அம்பிகை குழந்தைப்பேறு அருளுவதால் கர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறார் என்பது போன்ற தகவல்கள் சிறப்பு.
நூறாண்டு காலம் வாழ்ந்து, சமீப காலம் வரை நம்முடன் இருந்த தியாகி வி.கல்யாணம் அவர்களின் வரலாறு பல சுவையான தகவல்களை தந்தது. மிகவும் பிரபலமான இவர் மகாத்மா காந்திஜியிடம் பணி புரிந்ததால், அவரைப்போலவே எந்த பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்படாமல், நல்ல போற்றக்கூடிய மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் எத்தனை எத்தனையோ சிந்தனைக்கு உரிய உயர்ந்த கிளை கதைகள் இருக்கின்றன. சிவசக்தி எழுதியிருந்த 'எல்லா புகழும் இறைவனுகே...' என்ற மகாபாரதக்கிளை கதையும் மனதைக் கவர்ந்தது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.