திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடைய மனைவி சுபா (வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.
அதன்பிறகு 2 மகன்களுடன் வசித்த சுபாவுக்கு ஆதரவாக, அவருடைய தாய் பொன்னம்மாள் (70) கொம்புஒடிஞ்சான் பகுதிக்கு வந்து சுபாவின் வீட்டிலேயே வசித்தார். இவர்கள் வசித்த வீட்டின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளால் ஆனது. பனிக்கன்குடி-வெள்ளத்தூவல் மலைப்பாதையில் இருந்து 150 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப்பகுதியில் சுபாவின் வீடு இருந்தது. அருகில் வேறு வீடுகள் எதுவும் இல்லை. மலையடிவாரத்தில் தான் வீடுகள் இருக்கின்றன.
அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் சுபா கூலி வேலை செய்தார். அவருடைய தாய், 100 நாள் வேலைக்கு சென்று வந்தார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சுபா மற்றும் குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிட்டனர். பின்னர் சுபா மற்றும் அவருடைய 2 மகன்கள் ஹாலில் படுத்துக்கொண்டனர். பொன்னம்மாள், சமையல் அறை அருகில் உள்ள படுக்கை அறைக்கு தூங்கச்சென்றார். சிறிது நேரத்தில் அவர்கள் ஆழ்ந்து தூங்கினர்.
இரவு 9 மணி அளவில் சுபாவின் வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதனை அடிவாரத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் கவனித்தனர். உடனே அவருடைய வீட்டுக்கு ஓடிச்சென்று பார்த்த போது வீடு முழுமையாக தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. மேற்கூரை இடிந்து வீட்டுக்குள் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்து பதற்றம் அடைந்த அவர்கள் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள் இருந்து ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்தனர்.
இதற்கிடையே வீட்டுக்குள் கதவருகே பாதி உடல் எரிந்த நிலையில், சிறுவன் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தான். அவன் அருகில் இன்னும் 2 உடல்கள் முழுமையாக தீயில் எரிந்து கரிக்கட்டைகள் போல் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அடிமாலி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.
பின்னர் இதுகுறித்து வெள்ளத்தூவல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஹாலில் கருகிய நிலையில் கிடந்த 2 உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்து வைத்தனர். படுக்கையறையில் இடிபாடுகளுக்குள், தீயில் கருகிய நிலையில் மூதாட்டி பொன்னம்மாளின் உடல் கிடந்தது. இதனையடுத்து அந்த உடலையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.