tamilnadu epaper

ஹோலி ஊர்வலத்தில் மோதல் - வாகனங்கள், கடைகளுக்கு தீ வைப்பு

ஹோலி ஊர்வலத்தில் மோதல் - வாகனங்கள், கடைகளுக்கு தீ வைப்பு

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தில் இரண்டு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.


கிரிதிஹின் கோத்தம்பா சவுக்கில் உள்ள ஒரு குறுகலான தெரு வழியாக ஹோலி ஊர்லம் சென்ற போது இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டது. இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. சுமார் ஒரு மணிநேரம் இந்தக் குழப்பம் நீடித்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


யாருக்கும் காயம் இல்லை: இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. டாக்டர் பிமல் கூறுகையில், "கோர்தம்பா தொகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது இரண்டு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சில வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.


இதனிடையே, துணை மேம்பாட்டு ஆணையர் ஸ்மிதா குமாரி கூறுகையில், "ஹோலி கொண்டாட்டத்தின் போது, சில சமூக விரோத சக்திகள் சட்ட ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்க முயன்றுள்ளனர், ஆனால் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, அந்த சமூக விரோத கும்பல் சில வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கு விசாரணை தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.