புதுடெல்லி, மார்ச் 14–
யோகாவை மேம்படுத்துவதற்காக ஆயிரம் இடங்களில் யோகா பூங்காக்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன்21 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினம் 2025-ன் முன்னோட்டமாக யோகா மகாப் பெருவிழா 2025-ஐ மத்திய ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் நேற்று டில்லியில் தொடங்கிவைத்தார். யோகாவில் இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தனித்துவமான 10 சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் வெளியிட்டார்.
இதன்படி உலக சாதனையை நோக்கமாக கொண்டு 10,000 இடங்களில் யோகா செயல்விளக்கம் இருக்கும். யோகா அமர்வுகளை நடத்துவதற்கு 10 நாடுகளுடன் உலகளாவிய கூட்டாண்மை ஏற்படுத்தப்படும். சமூக ஈடுபாட்டிற்காக 1000 யோகா பூங்காக்கள் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோர் சிறப்பு யோகா நிகழ்வுகளில் இணைக்கப்படுவார்கள். பொது சுகாதாரத்தில் யோகாவின் பங்கு - 10 ஆண்டுக்கால தாக்கம் மதிப்பீடு செய்யப்படும்.
யோகா நிகழ்வுடன் மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை இயக்கங்கள் இணைக்கப்படும்.
யோகாவிற்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒரு வார கால யோகா மகா கும்ப நிகழ்ச்சி 10 இடங்களில் நடைபெறும். நிறைவில் மையப்படுத்தப்பட்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக நவீன சுகாதாரத்துடன் யோகாவை இணைக்கும் 100 நாள் முன்முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இதில் மூத்த அரசு அதிகாரிகள், தலைசிறந்த யோகா குருக்கள், விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களும் கலந்துகொண்டனர்.