tamilnadu epaper

2 நாள் அரசுப் பயணமாக மொரீஷியஸ் சென்றார் மோடி: விமான நிலையத்தில் அதிபர் உற்சாக வரவேற்பு

2 நாள் அரசுப் பயணமாக மொரீஷியஸ் சென்றார் மோடி: விமான நிலையத்தில் அதிபர் உற்சாக வரவேற்பு

மொரீஷியஸ், மார்ச் 11

பிரதமர் மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றார். அந்நாட்டின் 57-வது தேசிய தின விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மோடிக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.


அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த மோடியை மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.


மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார். இன்று மாலை அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலத்தை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். மேலும் 20 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.


பிரிட்டிஷிடம் இருந்து மொரீஷியஸ் கடந்த 1968, மார்ச் 12-ம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் மொரீஷியஸ் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இதில் இந்திய பாதுகாப்பு படையினரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறது.


கடந்த ஆண்டு மொரீஷியஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.