tamilnadu epaper

26.5.2025, திங்கட்கிழமை, அமாவாசை மற்றும் முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திர தினம்

26.5.2025, திங்கட்கிழமை, அமாவாசை மற்றும் முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திர தினம்


 திங்கட்கிழமையில் வரும் சர்வ அமாவாசை என்பதால் சோம அமாவாசை என்று சிறப்பு பெறுகிறது. காலை 7:42 மணி வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை நட்சத்திரம். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை என்பது இன்றைய தினத்தின் சிறப்பு. திங்கட்கிழமையும் அமாவாசையும் சேர்ந்திருந்தால் அந்த அமாவாசைக்கு 'சோமாவாதி அமாவாசை' என்றும் சொல்வார்கள்.


 இன்றைய தினம் நம் முன்னோர்களை நினைத்து பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் செய்வது நல்லது. இது முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சுபத் தடைகளை நீக்கி சுபகாரியங்களை நிறைவேற்றித் தரும். இந்த நாளில் மிக முக்கியமாக அரசமர வழிபாடு செய்வது நல்லது. அரசமரத்தை அன்றைய தினம் சுற்றிவருவது சுபிட்சமான என்று பலன்களைத் தரும். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு சத் சந்தான விருத்தி ஏற்படும். திருமணத் தடைகள் அகலும். அமாவாசையில் இல்லாதவர்களுக்கு உணவை தானமாக வழங்குவது மிக உயர்ந்த புண்ணியத்தைத் தரும். இதுதவிர கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் ஆகியவற்றையும் தானமாகக் கொடுக்கலாம். இதனால் நாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் நம்மை தேடி வரும். நமக்கு அதிர்ஷ்டத்தை தரும். சோமவாரத்தில் வரும் அமாவாசை நாளில் புதிய ஆடைகள் தானமாக கொடுக்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இதுபோன்ற உடைகளை தானமாக வழங்குவதால் அவர்கள் மன நிறைவடைவார்கள். இது நமக்கு மிகப் பெரிய புண்ணியத்தை சேர்க்கும். அமாவாசை அன்று சுத்தமான நெய்யை வாங்கி யாருக்காவது தானமாக கொடுக்கலாம். நெய் என்பது தூய்மை மற்றும் தெய்வீகத்துவமானதாகும். நெய், புனித சடங்குகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகும். இதனால் கோவில்களுக்கு நெய் வாங்கி தானமாக கொடுப்பது மிக உயர்ந்த தானமாக கருதப்படுகிறது.


அமாவாசையோடு அன்று கிருத்திகை விரதம். சூரியனுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில், கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதந்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது, ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.


 கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு முருகப்பெருமான். அருளால் நீண்ட ஆயுளும், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை, நிறைவான அறிவு, நிலையான செல்வம், நல்ல குணமுள்ள பிள்ளைகள் உட்பட பதினாறு பேறுகளும் கிடைக்கும்.


விபீஷணன் ராமபிரானின் நடையழகை தரிசிக்க விரும்பியதாகவும், அதை ராமபிரான் திருக்கண்ணபுரத்தில் சாதிப்பதாகவும் ஐதீகம் உள்ளது. இந்த நிகழ்வு அமாவாசைதோறும் நடைபெறும்.

சௌரிராஜப் பெருமாள் கருவறையிலிருந்து மெதுவாக நடந்து விபீஷணன் சந்நதிக்கு வந்து திரும்பி கருவறைக்கு செல்வது நடையழகு இன்று தரிசனமாக நடைபெறும்.



ப. கோபிபச்சமுத்து,

பாரதியார் நகர் பிரதான சாலை,

கிருஷ்ணகிரி - 1