tamilnadu epaper

அண்ணி என்றால் அன்பு

அண்ணி என்றால் அன்பு


         பவித்ரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இவள் எனது மனைவி கனகா தானா! என்ன ஒரு அடக்கம் , என்ன ஒரு பணிவு! திருமணமான இத்தனை காலத்தில் இவளை இப்படிப் பார்த்ததே இல்லையே!'


       கனகா என்றாலே அவளது முறைப்பும் விறைப்பும்தான் எல்லாருக்குமே நினைவுக்கு வரும்.

யாராக இருந்தாலும் அதட்டித்தான் பேசுவாள் . ஆனால் அப்படிப்பட்டவளுக்கு பவித்ரனின் தங்கை பிரியங்காவின் மீது பாசம் அதிகம் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் கணவனுடன் பிரச்னை ஏற்பட்டு புகுந்த வீட்டில் வந்து இருக்கும் பிரியங்காவை பார்க்கப் பார்க்க கனகாவுக்கு வருத்தமாக இருந்தது.


      இவளை எப்படியாவது அவளது கணவனுடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

பிரியங்கா வீட்டுக்கு வந்த நாளிலிருந்தே மனதுக்குள் வேறொரு கணக்கு போட்டபடி புது அவதாரம் எடுத்தாள். இதுவரை 'சிம்ம சொப்பனமாக '

இருந்து வந்த கனகா திடீரென்று

மாறியது பவித்திரனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அளவில்லாத ஆச்சரியத்தைக் கொடுத்தது.


      ' கணவனிடம் நாம் காட்டும் அன்பையும் அக்கறையையும் பார்க்கும் பிரியங்கா தனது அண்ணனும் அண்ணியும் எவ்வளவு அன்னியோன்யமான தம்பதிகளாக இருக்கிறார்கள் நாம் மட்டும் ஏன் இப்படி இங்கு வந்து இருக்கிறோம் என்று மனம் மாறி கணவனுடன் சேர்ந்து விடுவாள்'

என்றுதான் கனகா இவ்வளவு நாடகத்தையும் நடத்திக் கொண்டிருந்தாள்.அது கூடிய சீக்கிரம் நிறைவேறிவிடும் என்றும் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தாள்


    அன்று இரவு. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த கனகா யாரோ மெல்லிய குரலில் பேசும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தாள். பிரியங்கா தான்!

யாரிடமோ போனில் மெதுவாக பேசிக் கொண்டிருந்தாள்.

"ஷாலினி! நான் ஏன் இங்கு வந்து இருக்கிறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். என் வீட்டில் எனக்கும் என் கணவனுக்கும் நடக்கும் பிரச்னைகள் அனைத்தையும் உன்னிடம் ஒன்று விடாமல் சொல்லி இருக்கிறேன்.

அவன் ஒரு முழு நேர குடிகாரன்.

குடிக்கு அடிமையாகி இருந்த வேலையையும் தொலைத்து விட்டு

குடிக்கப் பணம் இல்லாவிட்டால் என்னை அடித்து உதைத்து எப்படியாவது பணம் கொண்டு வான்னு மிரட்டுவான். வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கூட குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தேன். இதெல்லாம் என் பிறந்த வீட்டுக்குத் தெரியாமல் பார்த்துக்கிட்டிருந்தேன். ஆனால் சமீபத்தில் அவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது இப்போது தான் எனக்குத் தெரிய வந்தது. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவன் திருந்துற மாதிரி தெரியலே. அதனால்தான் நான் இங்கு வந்துட்டேன்."


     "என் மேல் அன்பா இருக்கும் அண்ணி என்னை என் கணவனுடன் சேர்த்து வைத்து விடலாம்னு கனவு கண்டுகிட்டு இருக்காங்க. அதற்காக வேறு மாதிரி மாறிட்டாங்க.. அவங்களுக்கு அவங்க கம்பீரம் தான் அழகு. இனிமேல் கடைசி வரை இங்கேயே இருந்து 

அவங்களையும் ஒரு தாயைப் போல கவனித்துக் கொள்ளப் போறேன்.

எனக்காக அவங்க மாறத் தேவையில்லை அவங்க என்னிக்கும் அவங்களாகவே இருக்கணும் " என்றாள் பிரியங்கா.

கேட்டுக் கொண்டிருந்த கனகாவின் கண்கள் கண்ணீர் சிந்தின.



மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903