'அவள் வரும் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும். என்ன அழகு! என்ன அழகு! எனப் பார்த்துக்கொண்டே இருந்தான் விக்ரம். அவன் அருகே வந்தவள் விக்ரமின் கண்களை நோக்கி , "U r soosmart" என தலைகோதி மார்போடு அணைத்தாள்' என்று ஆர்வத்துடன் படித்துக்கொண்டே வரும்போது எல்லாம் கனவுதான் என்று முடித்துவிட்டார் 'கனவு' சிறுகதையை எழுதிய நா.பத்மாவதி. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் இது எதிர்பாராத முடிவுதான்! ஆனாலும் கனவில் அழகான பெண்கள் வந்தால் அதிர்ஷ்டம் வரும் என்று 'கனவுகளுக்கான பலன்கள்' என்ற புத்தகம் சொல்கிறது!
கே.பானுமதி நாச்சியாரின் 'தொடுதல்' என்ற சிறுகதை, அன்பான உரிமையான நல்ல தொடுதலில் உள்ள ஒரு இதமான அன்பை அப்படியே பிரதிபலித்தது. சொல்லப் போனால் மனதைத் தொட்டது என்று கூட சொல்லலாம்!
மல்லிகா கோபாலின் நேபாளம் பயணம் என்ற கட்டுரையின் மூலம் நேபாளம் என்ற அந்த சின்னஞ்சிறு நாட்டின் சிறப்பையும் அழகையும் உணர முடிந்தது. உலகின் மிக உயரமான பத்து மலைச் சிகரங்காளில் எட்டு நேபாளத்தில் உள்ளது. நேபாளத்தில் இந்திய பணவர்த்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். நேபாளம் செல்ல விசா தேவையில்லை. பாஸ்போர்ட் கூட தேவை இல்லைதான். சாலை வழியாகவும் இந்தியாவில் இருந்து நேபாளம் செல்லலாம். தங்க புத்தர் கோவிலுக்கு செல்ல 365 படிகள் ஏறவேண்டும் போன்ற ஏராளமான தகவல்கள் நேபாளத்தை பற்றி தெளிவாக தெரிந்துக்கொள்ள உதவியது.
தீவிர காந்தியவாதியும், திரு.வி.கவுடன் தமிழகம் முழுக்கப் பபயணம் செய்து இந்திய விடுதலைக்காக உரிமைக்குரல் கொடுத்தவரும், இலக்கியவாதியுமான மறை.திருநாவுக்கரசை பற்றிய கட்டுரை, அவரை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவியது.
'பூத்திட்ட காதலை காலம் பிரித்திட பூத்தது உப்பு காதலர் கன்னங்களில்!' என்ற எட்டே வார்த்தைகளில் காதலர்களின் சோகத்தை மிக தெளிவாக உணர்த்தி விட்டார் கவிஞர் ரிஷிவந்தியா. புதுக்கவிதை பகுதியில் வெளிவரும் ஒவ்வொரு கவிதைகளும், ஒவ்வொரு விதத்தில் உயர்வானவைதான் என்பதில் சந்தேகமில்லை.
'வாழ வேண்டும் என்ற ஆசையில் வாழும் மனிதர்களை விட செய்ய வேண்டிய "கடமைக்கும்" வாழ வேண்டும் என்ற கட்டாயத்திற்கும், வாழும் மனிதர்களே அதிகம்' என்று லால்குடி வெ.நாராயணன் ரவுசு ரமணி கேரக்டர் மூலம் சொன்ன கருத்து மிகச் சரியான உண்மையாகும்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.