இணைய தொடர்பு சேவைக்காக அமேசான் நிறுவனம் வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை ஏவி இருக்கிறது. இது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்
இணைய சேவை நிறுவனத்துக்கு போட்டியாக கருதப்படுகிறது. எந்த தொழிலிலும் போட்டியாளர்கள் இருந்தால் தான் அந்த நிறுவனம் மக்களுக்கு சிறந்த சேவையை குறைந்த கட்டணத்தில் அளிக்க முடியும். அந்த வகையில் அமேசானின் முயற்சி சரியானதே.
கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று
மார்க் கார்னே பிரதமராக ஆகியிருக்கிறார். அவர் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் ஒரு திருப்பமாக காலிஸ்தான் ஆதரவு கட்சி சரிவை சந்தித்திருக்கிறது. இந்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டில் கோலோச்சுவதை கனடா மக்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. கனடாவில் இருந்து கொண்டு இந்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்து வந்த காலிஸ்தான் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இனி குறையத் தொடங்கும்.
முஜிபுர் ரஹ்மானின் படம் போட்ட ரூபாய் நோட்டுகள்
வங்கதேசத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாக செய்தி படித்தேன். வங்கதேசத்தையே ஆரம்ப காலத்தில் கட்டி எழுப்பியவருக்கே இந்த கதி.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது இங்கு பொருந்துகிறது.
அமெரிக்காவில் அனைத்து லாரி ஓட்டுநர்களுக்கும் ஆங்கிலம் பேசும் திறமை கட்டாயம் என்று ட்ரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அது நியாயமானது தான்.
இதற்கு பரிகாரமாக நமது அரசு அமெரிக்கர்களை இந்தி கற்றுக்கொள்ள சொல்லாமல் இருந்தால் சரி.
மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழ்நாட்டில் கொட்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சில நேரங்களில் மருத்துவ கழிவுகள் மாநில எல்லை தாண்டி அடுத்த மாநிலத்தில் இருந்து இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதற்கு சோதனை சாவடிகளில் பணிபுரிபவர்களும் நிச்சயம் உடந்தையாக இருக்க வேண்டும். எனவே சோதனை சாவடியில் இருக்கும் கருப்பு ஆடுகள் மீதும் இந்த குண்டர் சட்டம் ஏவப்படும் என்று சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் வெளி மாநில கழிவுகள் தமிழகத்துக்குள் வருவது குறையும்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்