தஞ்சாவூர், ஏப். 4–
தஞ்சாவூரில், அரக்கனை வதம் செய்த கோடியம்மனின், பச்சைக்காளி, பவளக்காளி உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
தஞ்சாவூரை, ஆண்ட சோழ மன்னர்கள், நிசும்பசூதனியை வெற்றித்தெய்வமாகப் போற்றி, எட்டு திசைகளிலும் அம்மன் கோவில்களை உருவாக்கினர். விஜயாலயச் சோழனால், நிசும்பசூதனி அம்மன் சன்னதி ஒன்றை கரந்தையில் அமைக்கப்பட்டது.
தஞ்சன் என்ற அரக்கனை, சாந்தமான பச்சைகாளியாகவும், ருத்ரமாக பவளக்காளியாகவும் அம்மன் அவரதாரம் எடுத்து, அரக்கனை வதம் செய்து அழித்தார். அரக்கனை அழிக்க கோடி அவரதாரம் எடுத்தால், அம்மனுக்கு கோடியம்மன் என்ற பெயர் உருவானது. கோடியம்மன் கோவிலில் பச்சைக்காளி, பவளக்காளி உற்சவ திருவிழாவிற்காக, கடந்த மார்ச் 18ல் காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, மேல ராஜ வீதியில் சங்கரநாராயணன் கோவிலுக்கும், கொங்கணேஸ்வரர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு துவங்கி நேற்று அதிகாலை வரையில், பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று பச்சைக்காளி, பவளக்காளி ஐம்பொன் திருமேனிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து களிமேட்டுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியும், இரவு களிமேட்டில் வழிபாடுகள் நடைபெறும். பிறகு, களிமேட்டில் இருந்து 5ம் தேதி காலை கோடியம்மன் கோவிலை வந்தடைதல், 6ம் தேதி காப்பு அவிழ்ப்பு ஆகிய நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.