tamilnadu epaper

ஆக்ரோஷமான பாணியில் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம்’: பெங்களூரு கேப்டன் டு பிளிஸ்சிஸ்

ஆக்ரோஷமான பாணியில் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம்’: பெங்களூரு கேப்டன் டு பிளிஸ்சிஸ்

பெங்களூரு, மே.14-

டெல்லிக்கு எதிராக ஆடியது போல் நாங்கள் தொடர்ந்து ஆக்ரோஷமான பாணியில் விளையாட விரும்புகிறோம் என்று பெங்களூரு அணியின் கேப்டன் பிளிஸ்சிஸ் தெரிவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 47 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடியிருக்கிறது.

இதில் முதலில் ஆடி 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்த பெங்களூரு, 19.1 ஓவர்களில் 140 ரன்னில் டெல்லி அணியை சுருட்டியது. ஆட்டம் இழக்காமல் 32 ரன்கள் எடுத்ததுடன் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சென்னையுடன் மோதல்

பெங்களூரு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 18-ந் தேதி பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு அணி குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தினால் நிகர ரன் ரேட்டில் முன்னிலை பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதம் வைத்து வெல்ல வேண்டியது அவசியமானதாகும்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்த சீசனில் முதல் பாதியில் நாங்கள் வெற்றிக்காக போராடினோம். ஆனால் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் ஒருசேர எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதற்கு எங்களுடைய வீரர்களில் சிலர் பார்முக்கு வர வேண்டியது தேவையாக இருந்தது. அது நடந்த பிறகு தற்போது பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறோம். பேட்டிங்கை பொறுத்தமட்டில் கடைசியாக 7 ஆட்டங்களில் 5-ல் 200 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்கிறோம். பந்து வீச்சில் முதல் 5, 6 ஆட்டங்கள் நாங்கள் போதிய விக்கெட் வீழ்த்தவில்லை. ஆனால் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக எதிரணியை ‘ஆல்-அவுட்’ செய்து இருக்கிறோம். இது சிறப்பான முயற்சியாகும். இந்த மாற்றத்துக்காக நாங்கள் திரைமறைவில் நிறைய விஷயங்களை செய்து இருக்கிறோம். நாங்கள் சாதிக்க, முன்னேற்றம் காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய விவாதங்கள் செய்ததன் பலனாக எங்கள் வீரர்கள் ஜொலிக்க தொடங்கி இருக்கின்றனர்.

எங்களிடம் பந்து வீச்சில் நிறைய வித்தியாசமான திறமை கொண்ட வீரர்கள் இருக்கின்றனர். இதனால் பவுலர்களை பயன்படுத்துவதில் கேப்டனாக எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சூழ்நிலைக்கு தகுந்தபடி சிறந்த பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகிறோம். முகமது சிராஜ் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் யாஷ் தயாள், பெர்குசன், ஸ்வப்னில் சிங் ஆகியோரும் நன்றாக பந்து வீசுகிறார்கள். இந்த ஆட்டத்தில் நாங்கள் பவர்பிளேயில் 61 ரன்கள் எடுத்தோம். எங்கள் வீரர்கள் தைரியமாக முன்னால் இறங்கி வந்து ஆக்ரோஷமாக ஆடினார்கள். நாங்கள் இதேபோல் தைரியமாக ஆக்ரோஷமான பாணியில் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம்’ என்றார்.