ஆளுயர தேசியக்கொடியை
கம்பீரமாக
ஏந்தியவாறே
சென்றுக் கொண்டிருந்தாள்
பாரதமாதா;
“என் எழுத்தாணியை நீ வைத்துக்கொள்;
உன் கொடியை எனக்கு தா” என்று
கெஞ்சியபடியே
பின் தொடர்ந்தார்
திருவள்ளுவர்;
அவசரமாய்
மறுத்து மேலும்
சில அடி
நடக்கையில்
இடுப்பு சேலை நழுவ,
இப்போது
பாரத மாதாவின் தேசியக்கொடி
ஆதிவாசியின் கையில்;
பேரழகுடன்
வலம் வந்த
ஓர் இளவரசியின்
புரளும்
ஆடையோரங்களை
ஆளுக்கொருப் பக்கமாக
பிடித்தவாறே வந்தனர்
அரங்கத்திற்குள்
ஒரு கரடியும்
மனிதக் குரங்கும் ;
அன்னை
தெரசாவும் பாரதியாரும்
அளாவளாவிக்கொண்டிருந்தனர்
ஒருப்புறமாய்;
இந்தக்
களேபரத்தில்
நேரு மாமாவின் சட்டைப்பையை
அ்லங்கரித்த ஒற்றை ரோஜாப்பூ
ஒரு ராணுவ வீரரின் காலணியின்
கீழ் நசுங்கி கிடந்ததை
ஒருவரும் கவனிக்கவில்லை’!
ஆனந்தமாக
நடந்து முடிந்தது
அந்த சிறுவர் பள்ளியின்
மாறுவேடப் போட்டி நிகழ்ச்சி;
இடுப்பில்
அமர்ந்து வந்த
என் கிருஷ்ணனின்
கொண்டை மயிலிறகு
என் கன்னங்களில் சித்திரம் வரைய
வீடு திரும்புகையில்
மனமெங்கும்
மகிழ்வும்
ஏதோ ஓர்
நெகிழ்வும்
நிலைத்திருந்தது நிஜம்;
-ரேணுகாசுந்தரம்