தன் முனைக் கவிதைகள் நூல் விமர்சனம்.



முன்பு ஒரு தெருவுக்குள் நுழைந்து எழுத்தாளர் ஒருவர் இருக்கிறாரே அவர் வீடு எங்கே இருக்கிறது" />

tamilnadu epaper

கனவுப் பூவின் கற்பனை வாசம்

கனவுப் பூவின் கற்பனை வாசம்

லீ.சீனிராஜ் அவர்கள் எழுதிய"கனவுப் பூவின் கற்பனை வாசம்"

தன் முனைக் கவிதைகள் நூல் விமர்சனம்.



முன்பு ஒரு தெருவுக்குள் நுழைந்து எழுத்தாளர் ஒருவர் இருக்கிறாரே அவர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்க வேண்டும், இப்போதோ எழுத்தாளராக இல்லாமல் ஒரு மனிதர் இருக்கிறாரே அவர் வீடு எங்கே இருக்கிறது என்று தான் கேட்க வேண்டும். அந்த அளவுக்கு இன்று எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது. ஆனால் இன்று வெளிவரும் படைப்புகள் அனைத்தும் படித்து ரசிக்கும் படியாக தரமானதாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்த அளவுக்கு குப்பை மலைகளை எழுதிக் குவிக்கின்றனர். அத்திப்பூத்தாற் போலவே நல்ல படைப்புகளும், நல்ல கவிஞர்களும் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் நிகழ்வு நடக்கிறது.அந்த வகையில் அறியப்படுபவர்தான் இந்த கவிதை நூலின் ஆசிரியர் லி. சீனிராஜ் அவர்கள். வழக்கமான பாடுபொருட்களை தாண்டி நடப்பு நிகழ்வுகள், அறிவியல், மூடநம்பிக்கைகள், நட்பு,காதல், துரோகம், நம்பிக்கை, பருவகால மாற்றம், புலம்பெயர்வு, மாசு,பகுத்தறிவு,தமிழரின் தொன்மை, நாகரீகம் என அனைத்தையும் தீவனத் தொட்டிலாக நம்முன் வைக்கிறார் கவிஞர். புராணங்கள், செய்திகள், நெடுந்தொடர்கள், திரைப்படங்கள் என  அனைத்திலும் ரசனைகள் தானே வேர்கள். 

படிமங்கள், உள்ளுரை என ஏழு கடல் ஏழுமலை தாண்டி பொருள் கிளியைப் பிடிக்கும் சாகசம் தேவைப்படாத கவிதானுபவம் இந்நூலில் உங்களுக்கு கிடைக்கும் என்கிறார் கவிஞர். அது முற்றிலும் உண்மை என்பதை இந்நூலை படிக்கும் போதே நாம் உணர முடியும். 


பிரச்சனைகளைக் கண்டு பீதி அடைவதே மனிதனின் இயல்பான குணம். இரவும் பகலும் போல இன்பமும் துன்பமும் இயல்பானது என்பதை பெரும்பாலான மனிதர்கள் ஏற்றுக் கொள்வதே கிடையாது. வளர்ந்து வரும் இளைய தலைமுறையோ நோகாம நொங்கு திங்க வேண்டும் என்ற பேராசையிலேயே அலைகிறது. அதையே இன்றைய திரைப்படங்கள் உட்பட பல காட்சி ஊடகங்களும் பலவித குறுக்கு வழிகளையே கற்பிதம் செய்து தவறான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கு பேனாவை சாட்டையாக்கி கீழ்க்கண்ட நான்கு வரிகளால் சுளீரென அடித்திருக்கிறார் கவிஞர் லி.சீனிராஜ். 


"அமைதியான கடல்

சிறந்த மாலுமியை உருவாக்காது இடர்களை சந்திக்காதவன்

உயர்வைப் பெறுவது எப்படி?"



நாள்தோறும் நாம் செய்த செய்தித்தாள் படிக்கிறோம். இவர் போன்று நமக்கு சிந்தனை வரவில்லையே என்ற ஏக்கத்தை இந்த கவிதை ஏற்படுத்தி விடுகிறது. 


"சக்கரங்கள் இறங்கவில்லை

விமான விபத்து பீதி 

சக்கரங்கள் இறங்கின

ரயில் விபத்து சேதி" 


அடடா..என்ன ஒரு கற்பனை! 


இதைப்போல் மேலும் ஒரு அடடா கவிதை 


" உயிர் எடுக்கக்  கூலிப்படை 

அதைப் பிடிக்கத் தனிப்படை 

கொலை வெறியோ கழிசடை

அறிவாளை நீ  ஒப்படை"



வாழ்வின் நான்கு மூலைகளிலும் நடக்கும் செயல்களை எல்லாம் நான்கு வரிகளில் கவிதையாக்கியவர் காதல் கவிதையில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார். 


"உன் உச்சி வகிடு 

நான் நடக்கும் ஒற்றையடிப் பாதை மருதாணிக் கோலம் 

எனை அடைக்கும் மத்திய சிறைச்சாலை" 


நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, அழிப்பு என்று சமுதாயத்தீங்கு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 


அதனை 


"நீள அகலமான வேட்டி 

போன்றே நீர்க்குட்டை இருந்தது 

காலம் செல்லச் செல்ல

கைகுட்டை போலச் சுருங்கியது" 


சில கவிதைகள்  பிரச்சார நெடி போல் தெரிந்தாலும் இந்நூலில் இடம் பெற்றுள்ள நூறு கவிதைகளும் 100 விதமான ரகம்.நன்றாக பார்த்தால் இந்த நூலை இருவது நிமிடங்களுக்குள் வாசித்து முடித்து விட முடியும் ஆனால் ஒவ்வொரு கவிதையையும் படித்துவிட்டு அவ்வளவு  எளிதாக கடந்து போய்விட முடியாது என்பதே இதன் தனிச்சிறப்பு. அத்தகைய  தாக்கத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு கவிதையும் முத்திரை பதிக்கிறது. 


கவிதைகளில் சொற்கள்தான் உடல், பொருள்தான்.

உயிர்.மரபிலிருந்து புதுக்கவிதைகள், ஹைக்கூ உரைநடைக் கவிதைகள் தன்முனைக் கவிதைகள் என ஒன்றிலிருந்து ஒன்று நிகழ்வாகி இளகி கவிதை வார்ப்புகள் தோன்றும் காலமிது. சொல் புதிது பொருள் புதிது போலவே வடிவங்களும் புதியவை  பெரிதான இலக்கணங்கள் இல்லை எனினும் நான்கு வரிகள் 8 முதல் 12 சொற்களில் பிறக்கும் சுவாரஸ்யம்தான் தன்முனைக் கவிதைகள் என்று தன் உரையில் தன்முனைக் கவிதைகளின் தன்மை கூறுகிறார் நூலாசிரியர் லி.சீனிராஜ்.. 


படிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் ஆழமான புதிய சிந்தனைகளையும் இந்நூல் உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.



ஆசிரியர்: லி. சீனிராஜ் 

வெளியீடு: நூலேணி பதிப்பகம் 

தொடர்பு எண்: 98412 36965

விலை: 130 ரூபாய்.



என்றும்

அன்புடன் 

அ.பேச்சியப்பன்

ராஜபாளையம்