மும்பை:
மகாராஷ்டிர மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதேஷ் ராணே, ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராணே கூறியதாவது: மகாராஷ்டிராவில் உள்ள இந்து சமுதாயத்தினருக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்துக்களால் நடத்தப்படும் சரியான ஆட்டிறைச்சி கடைகளை அடையாளம் காண ‘மல்ஹர்’ சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இறைச்சியில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்யவும் இது உதவும்.
இந்துக்கள் மல்ஹர் சான்றிதழ் பெற்ற கடையில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டும். இந்த சான்றிதழ் பெறப்படாத கடையில் ஆட்டிறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த முயற்சி இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இஸ்லாமியர்கள், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடைகளில் ‘ஹலால்’ சான்றிதழ் பெற்ற இறைச்சியை மட்டுமே வாங்குகின்றனர். சில மாநிலங்களில் இந்த ஹலால் இறைச்சிக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டன. இந்நிலையில்தான் இந்துக்களுக்காக மல்ஹர் சான்றிதழ் பெற்ற இறைச்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.