tamilnadu epaper

இமாசல பிரதேசம்: அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

இமாசல பிரதேசம்: அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

குல்லு,


இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து இன்று மாலை இ-மெயில் வந்துள்ளது.


இதன்படி, அடுத்த 24 மணிநேரத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு உள்ளது என குல்லு மாவட்ட பேரிடர் மேலாண் கழக தலைவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் உள்பட அனைத்து அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர்.



குல்லு முழுவதும் வெடிகுண்டு செயலிழப்பு படைகள் மற்றும் கண்காணிப்பு பிரிவுகள் என பல்வேறு ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் மற்றும் நுண்ணறிவு அமைப்புகள் இந்த மிரட்டலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த இ-மெயில் அனுப்பப்பட்ட இடம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


இதற்கு முன்பு 4 முறை இமாசல பிரதேசத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதன்படி, மண்டி, ஹமிர்பூர் மற்றும் சம்பா மாவட்டங்களில் இதேபோன்ற மிரட்டல்கள் விடப்பட்டன.


கடந்த மாதம் தலைமை செயலாளர் அலுவலகம் மற்றும் மண்டி மாவட்ட துணை ஆணையாளர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது. ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்ட நிலையில், பரிசோதனை செய்ததில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன்பின்னர் அலுவலக வேலை தொடர்ந்து நடந்தது.