கந்தர்வகோட்டை மே 03.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான் பட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் சர்வதேச வானியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிளைத்தலைவர் தேவிப்பிரியா செய்திருந்தார். இந்நிகழ்வில் கூகுள் மீட் வழியாக மாணவர்களிடையே சர்வதேச வானியல் தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ரகமதுல்லா பேசும் பொழுது
சர்வதேச வானியல் தினம் முதன்முதலில் 1973 இல் டக் பெர்கர் என்பவரால் கொண்டாடப்பட்டது.
இது வடக்கு கலிபோர்னியா வானியல் சங்கத்தின் அப்போதைய தலைவரான டக் பெர்கர் என்பவரால் தொடங்கப்பட்டது.
2025 இல், சர்வதேச வானியல் தினம் மே 3 ஆம் தேதி சனி கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
சர்வதேச வானியல் தினம் ஆண்டுக்கு இருமுறை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் மே மாதத்திலும், இலையுதிர் காலத்தில் அக்டோபர் மாதத்திலும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் வானியல் மற்றும் விண்வெளி ஆர்வலர்களின் விண்வெளியில் நிகழும் நிகழ்வுகளைக் கவனிக்கவும், வானியல் மீது பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும் கொண்டாடப்படுகிறது.
சூரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், மற்றும் நெப்டியூன் ஆகும்.
சூரியனைச் சுற்றி கோள்கள் நீள்வட்டப் பாதையில் இயங்குகின்றன. புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்கள் பாறைகள் மற்றும் உலோகங்களால் ஆனவை. மற்ற நான்கு கோள்கள் வாயு கோள்கள் ஆகும்
சர்வதேச வானியல் தினத்தில் மாணவர்கள் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன்கள், பூமி எவ்வாறு சுழல்கிறது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். நிறைவாக மாணவர்களுக்கு கோள்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.