tamilnadu epaper

கடல் நிழல்

கடல் நிழல்

நூல் ஆசிரியர் : ஸ்ரீ மொழி வெங்கடேஸ். முதல் பதிப்பு 2004 

இரண்டாம் பதிப்பு 2023

 நூல் திறனாய்வு : 

எழுத்தாளர் ஜெயந்தி சுந்தரம்

 நூல் வெளியீடு :

ஸ்ரீ மொழி பப்ளிகேஷன்

21-A, அரசன் குளத்தெரு

திருவாரூர் - 1

 அலைபேசி: +91 9487258429

விலை: ரூ 120/-


 ஸ்ரீ மொழி வெங்கடேஸ் அவர்களை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அவர் நாடித்துடிப்பில் எழுத்துக்களும், சிந்தனைகளும் 24/7 கதியில் ஓடிக்கொண்டே இருக்கும் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அசாத்தியமான எழுத்து ஆற்றல். அசாத்தியமான அறிவு. புத்தகங்கள் படித்த மணியம் இருப்பார். நல்ல ஒரு படைப்பாளி. இவரின் கவிதைகள் எல்லாமும் கூட ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். 


 அவரின் இந்தக் கடல் நிழல் படித்தேன். இந்த கடல் நிழல் எதைப் பற்றியது என்றால் 2004 சுனாமியில் பெரும் தாக்குதலுக்கு இலக்கான நாகப்பட்டினம் சுனாமிக்கு பின் கண்ட விளைவுகளை சொல்கிறது கடல் நிழல்.


 இவருடைய இந்த புத்தகத்திற்கு மங்களம் பகவதி அவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரிய மாமணி, திருவாரூர் அவர்கள் உரை எழுதியிருக்கிறார். அவர் கூறியிருப்பது என்னவெனில் கடல் நிழல் ஸ்ரீ மொழி வெங்கடேஷ் அவர்களின் ஆகச் சிறந்த படைப்பு. இதனை படிப்பதற்கு இக்கால சமுதாயம் மிகப்பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். கதைக்குள் கதையாய் பற்பல உண்மைகள், அவை கசப்பானவை, இனிப்பானவை, புளிப்பானவை, எழுச்சியானவை என படைக்க அவர் அரும்பாடு பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவு என்று இவர் கூறியுள்ளார்.


 மானிட உடல் பஞ்சபூதங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளதையும். பஞ்சபூதங்கள் இல்லை எனில் பூமியில் உயிரினமே வாழ முடியாது என்ற கருத்தையும் ஸ்ரீ மொழி அவர்கள், கடல் அன்னை சுபஸ்ரீ உடன் உரையாடுவதன் மூலம் கதைக் கருவின் உச்சக்கட்டத்தை உணர்ச்சி பூர்வமாக சித்தரித்துள்ளார். குறிப்பாக பஞ்சபூதங்களை மாசு படுத்தி நாம் அவற்றைச் சீண்டினால் நமது கதி அதோகதி தான் என்பதை கடல் அன்னை சுபஸ்ரீயின் வழியாக நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. கதையில் பிணம் தின்னி கழுகுகளைவிட மிகவும் கேவலமான பணம் தின்னி கழுகுகளின் கீழ்மையை சாடுகிறார். முடைநாற்றம் வீசும் இன்றைய அரசியல் போக்கையும் சமுதாய சீர்கேடு என்னும் சாபக்கேட்டையும் சாட்டையடி கொடுத்து விரட்ட அறிவுறுத்துகிறார்.


 அது மட்டுமல்ல இந்த கதை உண்மையிலேயே பிரமிப்பு ஏற்படுத்தும் கதை. அதை படித்ததும் நாகப்பட்டினமும் திருவாரூரும் போக வேண்டிய அவசியம் இல்லை. பூகோ ளத்துக்குள் நுழைந்து நம்மை நாகப்பட்டினத்தில் நிறுத்திவிட்டார். சுனாமி என்றால் இப்படித்தான் என்று கண்முன் கொண்டுவரும் சாகசத்துக்கு சொந்தக்காரர் ஸ்ரீ மொழி அவர்கள்.


 உரையாடல்களில் கடலின் சீற்றம், ஆத்திரம், ரௌத்திரம், சுனாமி எப்படி இருக்கும் என்று கண்முன் கொண்டு வந்துள்ளார் ஸ்ரீமொழி அவர்கள். சுபஸ்ரீ, காதர், பாண்டியன் அவர்களின் நட்பு அழகாய் தொடுக்கப்பட்ட நறுமண பூக்கள். ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு அரசாங்கத்தை எதிர்கொள்ளும் தைரியம் அருமை. இவரின் எழுத்து கடலின் நிழலை அள்ளுகிறது. முதல் சுனாமி நுரையில் அடங்கிய சுருண்ட உயிர்கள் இரண்டாவது நீர் கத்தியின் வேகம் சுருட்டிய மிச்ச உயிர்கள் என்று சுனாமியை இவ்வளவு அழகாய் யாரும் சித்தரித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. கதைக்கு முத்தாய்ப்பாய் சுனாமியின் நுரையில் அடங்கி சுருண்ட உயிர்கள் எவ்வளவு? அப்பப்பா நீயா ஆயிரம் பேரை கொன்றாய் என்கிற சுபஸ்ரீயின் புலம்பலில், நமக்கு கடலின் கோரதாண்டவம் புலப்படுகிறது. சுபஸ்ரீ அவர்களின் புலம்பலில் அவரின் கருணையும் தெரிகிறது.


 அற்புதமான படைப்பு.