கோடை படுத்துகிறது
வயதானவர்கள் நடுங்கித்
திட்டியோய்கிறார்கள் கோடையை..
உற்சாகங்குறையாமல்
விளையாடிக் களிக்கிறார்கள்
விடலைகள்..
கோடை படுத்துகிறது..
•••
குளிர்ந்த தண்ணீர் வேண்டும்
பானை தண்ணீர் நலமே
பன்னீர் சோடா நல்லதும் கெட்டதும்
சாதாரண தண்ணீரும்
தாகம் தணிக்கும்
எவ்வளவு குடித்தாலும்
தாகம் அடங்கமாட்டேங்குதே
தாகம் அடங்காததுதாம்.
••••
கோடையில் வெளியில்
அலைவதை குறைச்சுக்கோ…
காய்கறி வாங்க ஒருதரம்
பொரியலுக்குக் காய் மறந்தாச்சுன்னு
ஒருதரம்.. தயிர்பாக்கெட்டுக்கு ஒருதரம்
கல்லுப்பு நேத்தே சொன்னேன்
மறந்துட்டீங்க.. அதுக்கு ஒருதரம்
முட்டை வாங்கலியா எத்தன தடவ
சொல்றது வாய் வலிக்குது போங்க
முட்டைக்கு ஒருதரம்
மணி ஒன்றைத் தாண்டிவிட்டது
வெயிலில் வெளியில் அலைவதைக்
குறைச்சுக்கோ..
வெயிலில் அலையற எனக்குத்தாம்
தெரியும்..
••••
கோடை நல்லதா? கெட்டதா?
மனுஷன் நல்லவனா? கெட்டவனா?
வெளியில போகலாமா? வேண்டாமா?
வாழணுமா? வாழ வேண்டாமா?
-ஹரணி,
தஞ்சாவூர்-2