எப்போதும், பரபரப்பாக இருக்கும் அந்த கடைவீதியில் அன்று கூடுதலாகவே கூட்டம் இருந்தது.
அந்த கூட்ட நெரிசலில் ஹெல்மெட் அணிந்த ஒரு இளைஞன் வேகமாக பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான்.
இறங்கிய வேகத்தில்
இரு கைகளிலும் உறை அணிந்தவாறு
கத்தி ஒன்றை க் கையில் பிடித்தபடி கூட்டத்திற்குள் நுழைந்தான்.
நடந்து வந்து கொண்டிருந்த பெரியவர் ஒருவரின் முகத்திற்கு நேராக கத்தியைக் காட்டியபடியே அவர் பையிலிருந்த பணத்தைப் பறித்தான்.
பெண்களிடம் எந்த வம்பும் செய்யவில்லை.
கொஞ்ச தூரம் நடந்து சென்று ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தான்.
மக்கள் அங்கும்,இங்கும் பயத்தில் ஒடிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று சைரன் ஒலித்தபடி போலீஸ் வாகனம் கடைத்தெருவில் நுழைந்தது.
கத்தியைக் காட்டி பணம் பறித்தவனின் கைகளில், போலீஸ் விலங்கு மாட்டியது.
காவல் நிலையத்தின் வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வழிப்பறிச் செய்தவனை போலீஸ் விசாரிப்பதை மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சொகுசு கார் ஒன்று, காவல்நிலைய வாசலில் வேகமாக வந்து நின்றது.
காரிலிருந்து பிரபல சினிமா டைரக்டர் பஞ்சவர்ணம் இறங்கி காவல்நிலையத்துக்குள் அவசரம், அவசரமாக நுழைந்தார்.
பிரபல டைரக்டர் பஞ்சவர்ணத்தை கண்டதும் இன்ஸ்பெக்டர் சங்கர் எழுந்து நின்று வரவேற்றார்.
சார்...வாங்க...வாங்க.
என்ன இந்த பக்கம்?
ஒரு போன் பண்ணிருக்கலாம்ல .என்று
பதற்றத்தோடு கேட்டார்..
பக்கத்து பஜார்ல ஒரு
சூட்டிங் பண்ணிட்டிருந்தன்....
புதுமுக நாயகன் அமுதனை பஜார்ல நடிக்க வச்சு, காட்சி இயற்கையா அமையனும்னு பொதுமக்களுக்குத் தெரியாம, காமிரவை வச்சு ஒரு கட்டிடத்தோட மேல் மாடியிலிருந்து காட்சியை சூட் பண்ணிட்டு இருந்தோம்.....
திடீர்னு உங்க ஜீப் அங்க நுழைஞ்சு, அவரை கைது பண்ணிட்டு வந்துட்டிங்க என்று படபடப்புடன் பேசினார்..
சாரி சார்.. சூட்டிங் நடக்கப் போகுதுன்னு நீங்களும் சொல்லல...
ஏன் சார்....நீங்களாவது இது சூட்டிங்னு சொல்லியிருக்கலாம்ல...என்று கைது செய்யப்பட்டவரை பார்த்து இன்ஸ்பெக்டர் கேட்டார்....!
நீங்கதான் என் ஹெல்மெட்டையே கழற்றவிடலியே... என்று சிரித்தபடி ஹெல்மெட்டை கழற்றினார் புதுமுக கதாநாயகன் அமுதன்..
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.