கோழிக்கோடு மாநகரில்
கோழிகளின் மாநாடாம்!
வாழியென்று வாழ்த்திட
வாருங்களே தோழர்களே!
நாழிகைகள் கடந்ததுவே
நடக்கின்ற மாநாடாம்!
ஊழிக்காலம் வந்ததுபோல்
பண்டிகைகள் வந்ததுவே.!
குழம்பினிலே கொதிக்கின்ற
கொடுமைகளை கூறுவதா..
கொதிநீரில் வேகவைத்து..
சாகும்நிலை மாறியதா!
முட்டையிட்டு அடைகாத்து
மூச்சடங்கி போவதுவோ.!
தட்டுகின்ற உறவுவர
உயிர்கதவை மூடுவதா?
விருந்துவர விருந்தாக
விதிநெருப்பில் வீழுவதா..
இலைநடுவே உடல்வைத்து
ஏப்பம்விட்டு முழுங்குவதா.?
சாமிவந்து கோழிக்கறி
வேண்டுமென கூறியதா.!
நோம்பிருந்து கொன்றுஉடல்
படையலிட தூண்டியதா.!
கூறைமீது ஏறிநின்று
எழுப்பியதை மறப்பதா
குக்கரிலே வேகவைத்து
குடல்வளர்க்க நினைப்பதா!
எவ்வுயிரும் தம்முயிராய்
நினைப்பாயோ மனிதனே..
சேவலுக்கு புதியகாலம்
வேண்டாமா புனிதனே!
-வே.கல்யாண்குமார்.