டெல் அவிவ்:
காசாவுக்கு செல்லும் உதவிப் பொருட்கள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பிறகு இரு தரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது. அதற்கு முன்னதாகவே 2-ம் கட்ட சண்டை நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் அறிவித்தனர்.
பதில் இல்லை: இதுகுறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், காசா பகுதிக்கு செல்லும் பொருட்கள் மற்றும் விநியோகத்தை இஸ்ரேல் நேற்று நிறுத்திக் கொண்டது. இதற்கான காரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதுவும் கூறவில்லை. ஆனால், “சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஏற்கெனவே கூறிய சில விஷயங்களை ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கூடுதல் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில், காசாவுக்கு செல்லும் அனைத்து மனிதாபிமான உதவிகள், பொருட்கள் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்கா பரிந்துரை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய கிழக்கு பிராந்திய தூதர் ஸ்டீவ் விட்காப், சண்டை நிறுத்தத்தை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரை நீட்டிப்பதற்கான சில பரிந்துரைகளை அளித்துள்ளார். அதன்படி, ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களில் பாதி பேரை முதல் நாளிலேயே விடுவிக்க வேண்டும். அதன்பின் நிரந்தர சண்டை நிறுத்தஒப்பந்தம் ஏற்பட்டவுடன் மற்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், சண்டை நிறுத்த நடவடிக்கையை முடக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காசாவுக்கு உணவுப் பொருட்கள், விநியோகத்தை நிறுத்தி இஸ்ரேல் மலிவான வகையில் பிளாக்மெயில் செய்கிறது. இது போர் குற்றமாகும் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.