tamilnadu epaper

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: ஏப்ரல் 19–ந்தேதி பிரதமர் மோடி துவக்குகிறார்

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: ஏப்ரல் 19–ந்தேதி பிரதமர் மோடி துவக்குகிறார்

புதுடெல்லி, மார்ச் 31


ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ஏப்ரல் 19-ந்தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பிரதான திட்டமாக வந்தே பாரத் ரெயில் திட்டம் பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவைகளுக்கு மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து காஷ்மீரிலும் முதன்முறையாக வந்தே பாரத் ரெயில் சேவை கொண்டு வரப்பட இருக்கிறது.


ஜம்மு கத்ரா ஸ்ரீநகர் இடையே உள்ள 272 கி.மீ. பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.


எனினும் ஜம்மு ரெயில்வே நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கட்ரா பானிஹால் இடையேயான 111 கி.மீ. தொலைவுக்கு கடந்த ஜனவரி மாதம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து இந்த பகுதியில் வந்தே பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 19ம் தேதி கட்ரா ரெயில் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.


இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்து நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் ஒரு நவீன மற்றும் திறன் வாய்ந்த ரெயில் சேவையானது இந்த பகுதிக்கு கிடைக்கும்.


இதுபற்றி ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் ஏப்ரல் 19-ந்தேதி உதாம்பூருக்கு பிரதமர் மோடி வருகை தருவார். உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த ரெயில் பாலம் பகுதிக்கு வந்து அவர் சேவையை தொடங்கி வைப்பார். இதன்பின்னர் கத்ரா பகுதியில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என கூறியுள்ளார்.


மாதா வைஷ்ணவதேவி கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கட்ரா பகுதியில் ரெயில் நிலையம் திறக்கப்பட உள்ளதால், இங்கு வரும் ஏராளமான யாத்ரீகர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


காஷ்மீருக்கான நேரடி ரெயில் இணைப்புக்கான நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் அமையும். தற்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சங்கல்தான் மற்றும் பாராமுல்லா இடையேயும் மற்றும் கத்ராவில் இருந்து நாடு முழுவதுமுள்ள பகுதிகளுக்கும் ரெயில் சேவை இருந்து வருகிறது.


ரெயில் சேவையால் காஷ்மீரை இணைக்கும் உயர் நோக்கத்துடனான இந்த திட்டம் புவியியல், வானிலை மற்றும் நிலப்பரப்பு சார்ந்த சவால்களால் அதன் பணிகள் தொடர்ந்து தாமதமடைந்து வந்தன நிலையில் தற்போது துவக்கப்பட உள்ளது.