மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த சூறவாளிக் காற்றால் முறிந்து விழுந்த வாழை மரங்கள்.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் - மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (மே 1) பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது.
பவானி ஆற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுமுகை பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் நேந்திரன், செவ்வாழை, ரோபஸ்டா, கதிலி என பல்வேறு வகையிலான வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படுகின்ற வாழைத்தார் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடும் வெயிலுடன் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது. இதற்கிடையே, நேற்று (மே 1) மாலை திடீரென வெயிலின் தாக்கம் குறைந்து, பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் மழையும் பெய்யத் துவங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் பல மடங்கு அதிகரித்து. சூறாவளி போல் சுழன்றடிக்க துவங்கியது.
இதனால் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை, மூலையூர், லிங்காபுரம், காந்தவயல், உளியூர், அம்மன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தன. இதுகுறித்து மேற்கண்ட பகுதி விவசாயிகள் கூறும்போது, “சூறாவளிக் காற்றால் பாதிப்புக்குள்ளான அனைத்து பகுதிகளையும் முறையாக ஆய்வு செய்து கணக்கெடுத்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானது தெரிய வரும்.
ஒன்பது மாத பயிரான வாழை அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி வீணானது, வாழை விவசாயிகளான எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே அரசு முறையாக ஆய்வு செய்து இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்கி அரசு உதவிட வேண்டும்,” என்றனர்.