சென்னை, நவ. 13–
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை, நிறுவன துணைத் தலைவர் சுதாசேஷய்யன் வெளியிட்டார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், ‘தென்னிந்திய மொழிகளுக்கிடையிலான இலக்கண உறவுகள்’ குறித்த பயிலரங்கத்தின் நிறைவு விழா நடந்தது.
விழாவில், கோழிக்கோடு பல்கலை முன்னாள் பேராசிரியர் பரமேஸ்வரன், மலையாளத்தில் மொழிபெயர்த்த ஐங்குறுநுாறு; திராவிட மொழியியல் சங்கம் மற்றும் சர்வதேச திராவிட மொழியியல் பள்ளி பேராசிரியர் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்த்த சிலப்பதிகாரம்; திராவிட பல்கலை பேராசிரியர் ஜெயலலிதா, கன்னடத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பியம் ஆகிய நூல்களை, நிறுவன துணை தலைவர் சுதாசேஷய்யன் வெளியிட, மொழிபெயர்ப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், சுதாசேஷய்யன் பேசுகையில், ‘‘தமிழுக்கும், மலையாளத்துக்கும் இப்போதும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொல்காப்பியத்துக்கும், கவிராஜ மார்க்கம் எனும் கன்னட இலக்கண நூலுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன,’’ என்றார்.
நிறுவன இயக்குனர் சந்திரசேகர் பேசுகையில், ‘‘நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சிலப்பதிகார மொழிபெயர்ப்பில், சிறப்பான உரையும், கன்னட தொல்காப்பியத்தில் இளம்பூரணர் உரையும், எளிமையாக வெளியாகி உள்ளது சிறப்பு,’’ என்றார்.
நிகழ்சியில், பதிவாளர் புவனேஸ்வரி, பேராசிரியர்கள் மாரியப்பன், செல்வதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.